Wednesday, July 19, 2023

1223. மாதமோ மார்கழி!

வள்ளி தன் வீட்டு வாசலில் வந்து நின்றபோது பனிக் காற்று அவள் உடலைச் சுள்ளென்று தாக்கியது.

இது மாலை நேரம் ஆயிற்றே! இப்போதே ஏன் இப்படிக் குளிர்கிறது?

"மார்கழி  மாசம். முன்பனிக்காலம்னு சொல்லுவாங்க. பொழுது சாயற நேரத்திலேயே எப்படிக் குளிருது பாரு! இந்தக் குளிர் உடம்புக்கு ஒத்துக்காது. உள்ளே போயிடு!" என்று கூறிக் கொண்டே வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் அம்மா.

'மார்கழி மாதம் என்பதாலா இந்த மாலை நேரத்தில் இவ்வளவு குளிர்கிறது?

'இல்லை. அதனால் இல்லை.

'சென்ற ஆண்டு மார்கழி மாத மாலை வேளையில் இது போன்ற குளிர் இல்லையே!

'ஓ! இப்போது காரணம் புரிகிறது.

'அப்போது என் காதலர் என் அருகில் இருந்தார். அதனால் என் முன் வரத் துணிவில்லாமல் பனியினால் மேனி கருத்து பசலை அடைந்து நடுங்கிக் கொண்டு வந்ததல்லவா இந்த மாலை!

'ஆனால் இன்று என்னிடம் பிணக்குக் கொண்டது போல் இப்படி என் மீது குளிரை வீசி என்னைத் துன்புறுத்துகிறதே இந்த மாலை! தினமும் இப்படி என்னைக் கொடுமைப்படுத்தி என் உயிரை வாட்டுவது என் அருகில் என் காதலன் இல்லை என்ற இளக்காரத்தினல்தானே?

'ஏ, மாலைப் பொழுதே! அவர் திரும்பி வரட்டும். அப்போது உன்னை கவனித்துக் கொள்கிறேன்!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

பொருள்:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது என் உயிரைப் பறிப்பது போல் தோன்றி, துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...