Thursday, July 20, 2023

1224. மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும்!

ஒரு கொடிய கனவு கண்டு திடுக்கிட்டுக் கண் விழித்தாள் நாயகி.

அவள் தன் கணவனோடு ஒரு சோலையில் அமர்ந்திருக்கிறாள். அவள் கணவன் எழுந்து எங்கேயோ போய் விடுகிறான்.

நாயகி தனியே உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெண் தன் கையில் ஒரு வாளை ஓங்கியபடி நாயகியை நோக்கி வருகிறாள். நாயகி பயந்து போய் எழுந்து ஓடுகிறாள்.

ஓடிக் கொண்டிருக்கும்போதே கனவு கலைந்து கண் விழுத்தாள் நாயகி.

என்ன ஒரு பயங்கரமான கனவு!

விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே!

அப்படியானால் அவளை யாராவது கொல்லப் போகிறார்களா? எதற்காக?

கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் இப்படி ஒரு கனவு ஏன் வருகிறது? யாரிடமாவது இந்தக் கனவுக்கு விளக்கம் கேட்கலாமா? யாரிடம் கேட்பது?

மாலை நேரத்தில் வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தாள் நாயகி.

மாலை நேரத்தில் கடந்த சில மாதங்களாகவே அவளுக்கு ஏற்பட்டு வந்த உணர்வு அன்றும் ஏற்பட்டது.

மனதில் இனம் புரியாத ஒரு வலியும் வேதனையும்.

ஏன் என் கணவரைப் பிரிந்ததிலிருந்து இந்த மாலை நேரம் என்னை இப்படித் துன்புறுத்துகிறது!

ஏ மாலையே! ஒருவேளை நீ என்னைப் போல் ஒரு பெண்ணாக இருந்தால் என் நிலையைப் புரிந்து கொண்டு என்னைத் துன்புறுத்தாமல் இருப்பாயோ என்னவோ!

இந்த எண்ணம் தோன்றியதுமே அன்று விடியற்காலை கனவில் வந்த பெண்ணின் உருவம் மனதில் வந்து போயிற்று.

'ஓ! மாலைப் பொழுது என்னை வருத்துவதை நினைத்துக் கொண்டே தூங்கியதால்தான் மாலைப் பொழுது ஒரு பெண் வடிவத்தில் வந்து என்னைக் கொல்ல வருவது போன்ற கனவு வந்திருக்கிறது!'

அந்தச் சோர்வான மனநிலையிலும் கனவு அளித்த பயம் நீங்கியது நாயகிக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது .

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

பொருள்:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...