Thursday, July 20, 2023

1225. காலைப் பொழுதே வருக!

சாரதாவின் கணவன் அவளை விட்டுப் பிரிந்ததிலிருந்து அவள் அவனுடன் கனவில்தான் வாழ்ந்து வந்தாள்.

தினந்தோறும் வரும் கனவு. அதில் வந்து அவளுடன் அன்புடன் பேசி அவளை மகிழ்விக்கும் அவள் கணவன்.

துவக்கத்தில், காலையில் கண் விழித்ததும் எல்லாம் கனவுதானா என்ற ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, காலையில் எழுந்ததும் கனவை நினைத்துப் பார்த்து மகிழ ஆரம்பித்து விட்டாள்.

அதனால் சாரதாவுக்குக் காலை நேம் ஒரு நாளின் அதிக மகிழ்ச்சியான பொழுதாக இருந்தது.

மாறாக மாலை வந்தாலே சாரதாவை ஒருவித ஏக்கமும், மனச் சோர்வும் பற்றிக் கொண்டன. மாலையில் கணவனுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் களித்த நாட்கள் நினைவு வந்து, இப்போது அப்படி இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின.

அதனால் மாலை நேரம் என்றாலே சாரதாவுக்கு மனவலியைத் தரும் நேரம் என்று ஆகி விட்டது.

ன்று இரவு உறங்கச் சென்றபோது சாரதாவின் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது.

'காலை, மாலை இரண்டுமே ஒரு நாளின் இரு பகுதிகள்தானே? அவற்றில் காலை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, மாலையோ எனக்கு மனவேதனையைத்தான் தருகிறது.

'காலைப் பொழுது என்மீது அன்பு காட்டுகிறதென்றால் காலைப் பொழுதுக்கு நான் ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும்.

'அதுபோல் மாலைப் பொழுது என்னை வாட்டி வதைக்கிறது என்றால் மாலைப் பொழுதுக்கு நான் ஏதேனும் தீங்கு இழைத்திருக்க வேண்டும்!

'ஆனால் காலைக்கு நான் செய்த நன்மை எது என்பதையும், மாலைக்கு நான் செயுத தீங்கு எது என்பதையும் என்னால் உணர முடியவில்லையே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

பொருள்:
யான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...