Monday, July 24, 2023

1226. கொடிது கொடிது மாலை கொடிது!

 செங்கமலத்துக்குத் திருமணம் ஆன புதிதில் ஒரு நாளின் சிறந்த பகுதி எது என்று அவளை யாராவது கேட்டிருந்தால் மாலை நேரம் என்று சொல்லி இருப்பாள்.

அந்த மாலை நேரத்தில்தான் அவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்புவான் என்பது ஒரு கராணம் என்றாலும், அந்த மாலை நேரம் தந்த சுகம்தான் முக்கியமான காரணம். 

வெயிலின் கடுமை தணிந்து இனிமையான பொழுதாகத் திகழும் மாலை.

இதமாக உடலை வருடிச் சென்று இன்பமளிக்கும் தென்றல் காற்றைக் கொண்டு வரும் மாலை.

வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ, தெருவில் நடந்தபடியோ கணவனுடன் பேசிக் கொண்டிருக்கும் இனிய அனுபவத்தை அளிக்கும் மாலை.

எல்லாவற்றுக்கும் மேல் இரவில் கணவனுடன் தனிமையில் படுத்துறங்கும் இன்பமான அனுபவத்தை எதிர்நோக்க வைக்கும் மாலை!

செங்கமலம் வீட்டுக்கு வெளியே வந்தாள். அவள் தனிமையைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்வது போல் மாலைப் பொழுது காட்சி அளித்தது.

'ஏன் இந்த மாலைப் பொழுது எனக்கு ஒரு நாளின் மோசமான பகுதியாக இருக்கிறது?' என்ற எண்ணம் எழுந்ததும் சில மாதங்ள் முன்பு வரை மாலைப் பொழுதை ஒரு நாளின் மிக இனிமையான பொழுதாகத் தான் கருதியது செங்கமலத்துக்கு நினைவு வந்தது.

'கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் இந்த மாலை இவ்வளவு கொடியதாக இருக்கக் கூடும் என்பது கணவனுடன் கூடியிருந்தபோது, எனக்குத தெரியாமல் போய் விட்டதே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 123
பொழுது கண்டிரங்கல்
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

பொருள்:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...