அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வாசுகியின் தோழி சிலம்பரசி, "வாசுகியை ரொம்பக் கோவிச்சுக்காதீங்கம்மா! அவ ஏற்கெனவே ரொம்ப வருத்தத்தல இருக்கா" என்றாள்.
"நான் கோவிச்சுக்கறது போதாது. நீயும் அவகிட்ட கடுமையாச் சொல்லு. அப்பவாவது அவ திருந்தறாளான்னு பாக்கலாம்!" என்றபடியே, உள்ளே சென்று விட்டாள் மணியம்மை.
"அம்மா சொல்லிட்டாங்க இல்ல? நீயும் உன் பங்குக்கு என்னைத் திட்டுடி!" என்றாள் வாசுகி, சிலம்பரசியிடம்.
"நான் யாருடி உன்னைத் திட்ட? உன் புருஷன் ஊர்லேந்து வந்தப்பறம், 'என் பெண்டாட்டியைத் திட்டினியா?'ன்னு என்னைக் கோவிச்சுக்கிட்டார்னா?" என்றாள் சிலம்பரசி, தோழியின் துயர மனநிலையைச் சற்றே மாற்றும் முயற்சியில்.
வாசுகி பதில் சொல்லவில்லை.
"அது சரி. நீ உன் புருஷனை அதிகம் நினைச்சுக்கிட்டே இருக்கேன்னு உங்கம்மாவும் மத்தவங்களும் கோவிச்சுக்கறது இருக்கட்டும். உன் புருஷனுக்கு இது தெரிஞ்சா, 'ஏன் என்னை ரொம்ப அதிகமா நினைச்சு உன்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டிருக்கே?'ன்னு உன்னைக் கோவிச்சுக்க மாட்டாரா?" என்றாள் சிலம்பரசி..
"நிச்சயமாக் கோவிச்சுக்க மாட்டாரு. ஏன்னா, அவரை நினைச்சுக்கிட்டிருக்கறதுதான் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்துன்னு அவருக்குத் தெரியும். என் மனசைப் புரிஞ்சுக்காம, நான் அவரை அதிகமா நினைக்கறேன்னு என்னைக் குத்தம் சொல்றதுக்கு, அவர் உங்களை மாதிரி ஆள் இல்லையே!" என்றாள் வாசுகி.
அதைச் சொல்லும்போது வாசுகியின் முகம் மலர்ந்திருந்ததை சிலம்பரசி கவனித்தாள்.
நினைந்தவர் புலம்பல்
பொருள்:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும், அவர் என்மேல் சினம் கொள்ள மாட்டார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
No comments:
Post a Comment