Thursday, December 7, 2023

1286. குறை ஒன்று இல்லை (பல உண்டு!)

"என்கிட்ட உனக்குப் பிடிச்சது என்னென்ன சொல்லு பாக்கலாம்!" என்றான் கோவிந்த்.

"உங்கிட்ட  எனக்கு எல்லாமே பிடிக்கும். எதைன்னு சொல்றது?" என்றாள் சுகன்யா.

"பொதுவாச் சொன்னா எப்படி? குறிப்பா சிலதையாவது சொல்லு."

"நீ நல்லா டிரஸ் பண்ணிக்கிற. இனிமையாப் பேசற. கோபப்படறதே இல்லை. சிகரெட், குடி மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லை. உன் அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்க."

"அடேயப்பா! எங்கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கறது எனக்கே தெரியாதே!" என்றான் கோவிந்த் சிரித்தபடி.

"ஏண்டி, தினம் உன் காதலனைச் சந்திச்சுட்டு வந்தப்புறம் ஏதாவது புலம்பிக்கிட்டே இருக்கே?" என்றாள் நளினி.

"அவன்கிட்ட இருக்கற குறைகளை யார்கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. என்னோட நெருங்கிய தோழியான உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்?"

"எல்லார்கிட்டேயும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்."

"ஆனா அவன்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு."

"அப்படி என்ன குறைகள்?"

"சில சமயம் என்னைப் பாக்க வரேன்னு சொல்லிட்டு வரதில்ல. கேட்டா ஏதாவது பொய்யான காரணம் சொல்றான். அவன் படிப்புக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா இப்ப இருக்கற வேலையே திருப்தியா இருக்குன்னு சொல்றான். முன்னேறணுங்கற ஆசை வேண்டாம்? அப்புறம், எப்பவும் தன்னோட அம்மாவைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கா. என் மேல அக்கறை காட்டறதில்ல. நான் புதுசா ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தா அதைக் கூட கவனிக்கிறதில்ல. அப்புறம்..."

"சரி. இதையெல்லாம் அவன்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே?"

"என்னவோ தெரியலடி. அவனோட இருக்கறப்ப இதெல்லாம் எதுவுமே என் ஞாபகத்துக்கு வரதில்ல" என்றாள் சுகன்யா, சற்றே கூச்சத்துடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

பொருள்:
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபோது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...