அஸ்வினும் அனுபமாவும் காதலர்கள் என்பது அனுபமாவின் தோழிகளுக்குத் தெரியும்.
அப்படி இருக்கும்போது, அனுபமாவை அவள் தோழிகள் முன்னிலையில் அஸ்வின் கேலி செய்தது அனுபமாவை அதிர்ச்சி அடையச் செய்தது.
அனுபமா கிராமத்துப் பெண்ணாம். அவளுக்கு நாகரீகமான பழக்கங்கள் கிடையாதாம். ஓட்டலில் ஸ்பூனால் சாப்பிடும்போது தன் உடைகளில் சிந்திக் கொள்வாளாம். ஸ்பூனால் சாப்பிடத் தெரியாதவள், கையால் சாப்பிட வேண்டியதுதானே, ஏன் ஸ்பூனால் சாப்பிட முயற்சி செய்து தன் உடைகளைப் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? கல்யாணத்துக்குப் பிறகு, துணிகளின் கறைகளைப் போக்கும் சோப்புத் தூள் வாங்கவே அவன் சம்பளத்தில் பாதி போய் விடுமாம்.
அஸ்வின் பேசியதைக் கேட்கக் கேட்க, அனுபமாவின் மனதில் அவமான உணர்வு பீறிட்டு எழுந்தது. அஸ்வின் பேச்சைக் கேட்டு அவள் தோழிகள் சிரித்தது, அவள் அவமான உணர்வை இன்னும் அதிகமாக்கியது.
விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் அனுபமா. தான் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்து, அஸ்வின், "சாரி! சும்மா விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்" என்று கூறியதைக் கூட அனுபமா காதில் போட்டுக் கொள்ளவில்லை.
பத்து நாட்களுக்குப் பிறகு, தனிமையில் அஸ்வினின் மார்பில் தன் தலையைச் சாய்த்தபடி நின்றிருந்தாள் அனுபமா.
"நல்லவேளை! அன்னிக்கு நீ கோவிச்சுக்கிட்டுப் போனதைப் பாத்தப்புறம், நீ எங்கிட்ட திரும்பி வர மாட்டியோன்னு பயந்துட்டேன்!" என்றான் அஸ்வின், அவள் தலைமுடியைக் கோதியபடி.
'நீ அப்படிப் பேசினதை என்னால மன்னிக்கவே முடியாது. ஆனாலும், என்ன செய்யறது? உன் மார்பில என் தலையை சாய்ச்சுக்கிட்டு இருக்கறப்ப கிடைக்கிற சுகத்தை என்னால மறக்க முடியலியே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனுபமா.
கற்பியல்
No comments:
Post a Comment