Saturday, December 9, 2023

1289. நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன்!

"என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? ஆனா, ஏன் கல்யாணம் ஆனதிலேந்து ஒரு மாதிரியாவே இருக்க?" என்றான் கார்த்திக், மலரிடம்.

"ஒண்ணுமில்லையே!" என்றாள் மலர். அப்படிச் சொல்லும்போதே, அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.

"எனக்குத் தெரியும்!" என்ற கார்த்திக், அவள் காதருகில் குனிந்து, "முதலிரவு தள்ளிப் போய்க்கிட்டே இருக்கேன்னுதானே?" என்றான், சிரித்துக் கொண்டே.

"சீச்சீ!" என்றாள் மலர், இன்னும் அதிகப் பதட்டத்துடன்.

"இந்தப் பெரியவங்க இப்படித்தான்! நாள் நட்சத்திரம்னு பார்த்து, நாம ஒண்ணு சேரறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதான் இப்ப தேதி குறிச்சுட்டாங்களே! இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு!" என்றான் கார்த்திக்.

"போன வாரம் முழுக்க டல்லா இருந்த. இப்ப முதலிரவு முடிஞ்சப்புறம், நாலு நாளா எவ்வளவு உற்சாகமா இருக்க! நான் சொன்னபடி, முதலிரவு தள்ளிப் போகுதேங்கற கவலையினாலதானே முதல்ல டல்லா இருந்தே?" என்றான் கார்த்திக்.

மலர் பதில் சொல்லவில்லை.

சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த அவள் தோழி வாணி,  முதலிரவின்போது அவள் கணவன் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும், அதற்குப் பிறகும், அவளுடைய உணர்வுகளை மதிக்காமல், தொடர்ந்து அவ்வாறே நடந்து கொள்வதாகவும், ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று தான் வருந்துவதாகவும் மலரிடம் சொல்லி இருந்தாள்.

அத்துடன், "என்னோட தோழிகள் சில பேருக்கும் இதே அனுபவம்தான். எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு!" என்று வாணி கூறியதால், தன் கணவனும் அப்படி இருப்பானோ என்ற பதட்டத்தில் தான் இருந்ததையும், கார்த்திக்கின் மென்மையான அணுகுமுறையால், அந்தப் பதட்டம் நீங்கி உற்சாகமாக இருப்பதையும் மலர் கார்த்திக்கிடம் கூறவில்லை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

பொருள்:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...