Wednesday, October 14, 2020

1124. உயிர் போய் உயிர் வந்து...

காலில் கட்டுப் போடப்பட்டு மருத்துவமனக் கட்டிலில் படுத்திருந்த அரவிந்தனைப் பார்த்ததும் மீராவுக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது.

"எப்படி ஆச்சு இது? நீ ரொம்ப மெதுவா, கவனமா பைக் ஓட்டறவனாச்சே?" என்றாள் அவள். 

"அது நீ பின்னால உக்கந்திருக்கறப்ப. தனியா ஓட்டறப்ப நன் எப்படி ஒட்டுவேன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று சொல்லிச் சிரித்தான் அரவிந்தன்.

"இவ்வளவு வலியிலேயும் எப்படித்தான் சிரிக்கிறியோ!"

"ஆ..."

"என்ன ஆச்சு, ரொம்ப வலிக்குதா? நர்ஸைக் கூப்பிட்டடுமா?" என்றாள் மீரா பதறியவளாக.

"வேண்டாம். உங்கிட்ட பேசினதில வலியை மறந்திருந்தேன். நீ இவ்வளவு வலியிலேயும் எப்படி சிரிக்கிறேன்னு கேட்டு என் வலியை ஞாபகப்படுப்படுத்திட்ட! அதான் கத்தினேன். நர்ஸைக் கூப்பிட்டுடாதே. அப்புறம் பிரச்னை ஆயிடும்" என்றான் அரவிந்தன்.

"என்ன பிரச்னை ஆயிடும்? ஊசி போட்டுடுவாங்கன்னு பயமா? நீ என்ன சின்னக் குழந்தையா?"

"ஊசிக்கெல்லாம் பயப்படற உடம்பா இது? ரெண்டு நாள்ள எவ்வளவு ஊசி பாத்துடுச்சு தெரியுமா?"

"பின்ன என்ன பிரச்னை?"

"கண் முன்னால ரெண்டு பெண்கள் இருந்தா யாரை சைட் அடிக்கறதுன்னு குழப்பம் வருமே, அந்தப் பிரச்னையைச் சொன்னேன்!"

"ஏற்கெனவே அடிபட்டுப் படுத்திருக்கே. இல்லேன்னா உன் மண்டையிலேயே போட்டிருப்பேன்" என்றாள் மீரா சிரிப்பை அடக்க முடியாமல். விபத்தில் அடிபட்ட காதலன் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

"அது சரி. எப்படி அடிபட்டுதுன்னு சொல்லவே இல்லையே!"

" பைக்கில வேகமாப் போயிட்டிருந்தேன். ஏதோ ஒரு பெரிய வண்டியிலேந்து ரோடில நிறைய எண்ணெய் கசிஞ்சிருக்கும் போலருக்கு. அதில வழுக்கி வண்டி விழுந்திடுச்சு. இந்தக் கால்ல ஒரு எலும்பு உடைஞ்சிருக்கு. அதை நேரா வச்சுக் கட்டி இருக்காங்க. இன்னும் எத்தனே நாளுக்கு இப்படிக் காலை அசைக்காம படுத்திருக்கணுமோ தெரியல"

"ரொம்ப வலிக்குதா?" என்றாள் மீரா அனுதாபத்துடன்.

"ரொம்ப ஒண்ணும் இல்ல. உயிர் போற அளவுக்கு வலிக்குது. அவ்வளவுதான்!"

"உயிர் போற அளவுக்கு வலிக்குதுன்னு எப்படிச் சொல்ற? இதுக்கு முன்னாடி உனக்கு உயிர் போனதில்லேயே!" என்றாள் மீரா அவன் பாணியிலேயே அவனைச் சீண்டியவளாக.

"ஏன் போனதில்ல? எத்தனையோ தடவை போயிருக்கே!"

"என்ன உளறரே?"

"உண்மையைத்தான் சொல்றேன். நீ  என்னோட இருந்துட்டு என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்ப எல்லாம் என் உயிர் போயிடும். மறுபடி உன்னைப் பாக்கறப்பதான் போன உயிர் திரும்ப வரும். இது மாதிரி எத்தனையோ தடவை நடந்திருக்கே!"

சற்று நேரம் அரவிந்தனுடன் பேசி விட்டுக் கிளம்பினாள் மீரா. கிளம்பும்போது, "கவலைப்படாதே! சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க"  என்றாள்.

மீரா அறை வாசலுக்குப் போனதும், அரவிந்தனிடமிருந்து "ஆ" என்ற அலறல் கேட்டது.

திரும்பிப் பார்த்த மீரா,"என்ன வலிக்குதா?" என்றாள்.

"வலிக்கல. உயிர் போகுது. நீ போற இல்ல, அதான்!" என்றான் அரவிந்தன் சிரித்தபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

பொருள்:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்திருக்கும் இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்




No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...