Friday, January 29, 2021

1127. கண்ணுக்கு மையழகு!

"கொஞ்ச நாளா உன் தோற்றத்தில ஒரு மாற்றம் தெரியுதே!" என்றாள் யுவா.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நீ கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் பாக்கறதால அப்படித் தெரியுது!" என்றாள் ஶ்ரீநிதி.

"ஒரு வாரம்தான் நான் ஊருக்குப் போயிருந்தேன். அதுக்குள்ள என்ன பெரிய மாற்றம் வந்திருக்கும்?" என்ற யுவா "நீங்கள்ளாம் இதை கவனிக்கலியா?" என்றாள் தன் பிற தோழிகளிடம்.

"கவனிக்காம என்ன? முதல்நாளே கவனிச்சுக் கேட்டுட்டோம். அவ சொல்ல மாட்டேங்கறா! அது இருக்கட்டும். ஒரு மாற்றம்னு சொல்றியே, என்ன மாற்றம்னு உனக்குத் தெரியலையா? அப்படீன்னா நீ ஒரு டியூப்லைட்னு அர்த்தம்! இத்தனைக்கும் அவளுக்கு எங்களையெல்லாம் விட நெருங்கிய தோழி நீதான்!" என்றாள் வனிதா என்ற மற்றொரு தோழி.

"தெரியாம என்ன? ஶ்ரீநிதியோட தனித்தன்மையே அவ கண்ணையே மறைக்கிற மாதிரி அவ இட்டுக்கற மைதான். அதுதான் இப்ப இல்ல. அவ வாயாலேயே சொல்லுவாளோன்னு நினைச்சேன்" என்ற யுவா ஶ்ரீநிதியைப் பார்த்து, "நீ மை தீட்டிக்கறப்ப நான் பாத்திருக்கேன். அப்படியே கண்ணோட கீழ்ப்பகுதி முழுக்க பெயின்ட் பண்ற மாதிரி மையை லாவகமாத் தடவி அதைக் கண்ணுக்கே ஒரு பார்டர் மாதிரி அழகாப் பண்ணிக்கறதைப் பார்த்து நான் எத்தனையோ தடவை ஆச்சரியப் பட்டிருக்கேன். உங்கிட்டயும் சொல்லி இருக்கேன். மை கரைஞ்சு கண்ல பட்டுக் கண் கரிக்கறதைக் கூடப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கறதில அப்படி ஒரு ஆர்வம் உனக்கு! ஏன் திடீர்னு மை தடவிக்கறதை நிறுத்திட்ட?" என்றாள்.

"காரணம்னு ஒண்ணுமில்ல. சும்மாத்தான். நீ சொன்ன மாதிரி எதுக்குக் கண் கரிக்கறதைப் பொறுத்துக்கிட்டு மை தடவிக்கணும்னுதான்" என்றாள் ஶ்ரீநிதி.

"சமாளிக்காதேடி. உண்மையான காரணம் எனக்குத் தெரியும். சொல்லிட்டடுமா?" என்றாள் யுவா விடாமல்.

ஶ்ரீநிதி 'வேண்டாம்' என்று கெஞ்சுவது போல் தலையாட்டினாள்.

"சொல்லத்தான் போறேன்" என்ற யுவா, மற்ற தோழிகளைப் பார்த்து, "விஷயம் ஒண்ணுமில்லீங்கடி. இவ வீட்டில மார்கழி மாசத்தில விதரம் இருந்து திருப்பாவை படிப்பாங்க. திருப்பாவையில ஆண்டாள் 'மையிட்டெழுதோம்'னு சொல்லி இருப்பாங்க. அதனால இவங்க வீட்டில பெண்கள் யாரும் மார்கழி மாசத்தில கண்ணுக்கு மை வச்சுக்க மாட்டாங்க. இதைச் சொன்னா நாம இவளைக் கிண்டல் பண்ணுவோம்னு பயந்துதான் இவ காரணத்தைச் சொல்லாம மழுப்பி இருக்கா" என்று சொல்லி விட்டு, ஶ்ரீநிதியைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, "என்னடி நான் சொல்றது சரிதானே?" என்றாள்.

ஶ்ரீநிதி மௌனமாகத் தலையாட்டினாள்.

"இவ்வளவுதானா? சப்புனு போயிடுச்சே!" என்று சொல்லி விட்டு மற்ற தோழிகள் ஒவ்வொரொவராகக் கலைந்து சென்றனர்.

ற்ற தோழிகள் சென்றதும்,"இப்ப எங்கிட்ட உண்மையைச் சொல்லு. நீ ஏன் மை இட்டுக்கலேன்னு எனக்குத் தெரியாது. ஆனா யாரோ ஒத்தன் உனக்கு மை போட்டதுதான் இதுக்குக் காரணமா இருக்கும்னு எனக்குத் தெரியும். யாருடி அவன்?" என்றாள் யுவா.

"அஸ்வின்!" என்றாள் ஶ்ரீநிதி நெளிந்தபடி.

"ஓ, பரவாயில்ல. நல்ல பையனைத்தான் செலக்ட் பண்ணி இருக்கே! மை இட்டுக்கிட்டா உனக்கு நல்லா இல்லேன்னு அவன் சொன்னானா என்ன? அப்படிச் சொல்லி இருந்தா, அவனுக்கு ரசனை இல்லேன்னுதான் அர்த்தம்!"

"சேச்சே! அவன் அப்படிச் சொல்லல. அவன் கூட நான் ஏன் மை இட்டுக்கறதில்லேன்னு கேட்டுக்கிட்டிருக்கான். அவங்கிட்டயும் மழுப்பலாதான் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்."

"பின்னே ஏன் மை இட்டுக்கறதை நிறுத்திட்ட? நான் சொன்ன மாதிரி நிஜமாகவே ஏதாவது விரதமா, ஐ மீன், காதலுக்காக விரதமா?"

"காணத்தைச் சொன்னா என்னைக் கிண்டல் பண்ணுவ. என்னைப் பைத்தியக்காரின்னு நினைப்பே!"

"பரவாயில்ல சொல்லு. கிண்டல் எல்லாம் பண்ண மாட்டேன்!" என்று ஊக்கினாள் யுவா.

"இப்பல்லாம் அவன் நினைவு எப்பவும் என் மனசிலேயே இருந்துக்கிட்டிருக்குடி. கண்ணை மூடினா கூட அவன் முகம்தான் தெரியுது - ஏதோ கண்ணுக்குள்ளேயே அவன் குடியிருக்கிற மாதிரி. நான் மையிட்டுக்கறப்ப, மையோட கருப்பு பட்டு, கண்ணுக்குள்ள இருக்கற அவன் உருவம் அழிஞ்சு போயிடுமோன்னு பயந்துதான் மை தடவிக்கறதை நிறுத்திட்டேன்!" என்றாள் ஶ்ரீநிதி, சங்கடத்துடன் நெளிந்தபடி.

"நீ பைத்தியக்காரிதாண்டி. சந்தேகமே இல்லை" என்றாள் யுவா, செல்லாமாகத் தன் தோழியின் கன்னத்தில் தட்டியபடி.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

பொருள்:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்



No comments:

Post a Comment

1304. பூங்கொத்துடன் வந்தவன்!

"என்னடி, முரளி ரெண்டு நாளா உன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம். "வேற ஏதாவது வேலை இருந்திருக்கும்"...