Saturday, January 30, 2021

1128. ஆறிய காப்பி!

"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா?" என்றார் சபாபதி.

"ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூடாதா?" என்றாள் அவர் மனைவி சிவகாமி.

"நான் அடிக்கடிகாப்பி கேக்கறேன்னு நீ குத்தம் சொல்லுவியே, அதுக்காகச் சொன்னேன்."

"சும்மா உக்காந்துக்கிட்டிருக்கற உங்களுக்கே அடிக்கடி காப்பி தேவைப்படும்னா, அடுப்படியிலேயே நின்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்குத் தேவைப்படாதா? நானும் அப்பப்ப குடிச்சுப்பேன்தான்!"

"ஓ, அப்படியா சங்கதி! ஆனா நான் மட்டும் அடிக்கடி காப்பி கேக்கறதுக்குத் திட்டு வாங்கிக்கணும் போலருக்கு!" என்ற சபாபதி, சமையலறையிலிருந்து தன் மகள் செல்வி கையில் காப்பி தம்ளருடன் வருவதைப் பார்த்து விட்டு, "இன்னிக்கு எத்தனாவது காப்பி இது?" என்றார் மகளிடம்.

செல்வி சிரித்துக் கொண்டே காப்பியை ரசித்து உறிஞ்சினாள்.

"ஏண்டி, காப்பி குடி, வேண்டாங்கல. ஆனா ஏன் இவ்வளவு சூடாக் குடிக்கற? தம்ளரைக் கையால பிடிக்க முடியாத அளவுக்கு சூடு. துணீயால புடிச்சுக்கிட்டுக் குடிக்கற! இவ்வளவு சூடா காப்பி நெஞ்சுக்குள்ள இறங்கினா, சூட்டை நெஞ்சு தாங்குமா?" என்றாள் சிவகாமி.

"நல்லா, இதமா இருக்கு. சூடும் ஒரு சுவைன்னு ஒரு பழமொழி இருக்கே!" என்றாள் செல்வி.

"அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய பயனுள்ள பழமொழிதான் போ!" என்றார் சபாபதி சிரித்தபடி.

"ஏண்டி, இப்பல்லாம் காப்பி குடிக்கறதைக் குறைச்சுட்ட. அதோட காப்பியை நல்லா ஆத்தி அது பச்சைத்தண்ணி மாதிரி ஆனப்பறம் குடிக்கற! என்ன ஆச்சு உனக்கு?" என்றாள் சிவகாமி.

"நீதானேம்மா சொன்னா, சூடா குடிச்சா, சூடு நெஞ்சுக்குள்ள இறங்கிடும்னு?"

"நான் அப்படிச் சொன்னதுக்கு, சூடும் ஒரு சுவைன்னு பழமொழில்லாம் சொன்னே!"

"ஆறிப் போனா, அதிலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யுது. அதோட, காப்பி குடிக்கறதைக் குறைச்சுக்கணும்னு நினைக்கிறேன். ஆறின காப்பி குடிச்சா அடிக்கடி குடிக்கணும்னு தோண்றதில்ல!"

"என்னவோ போ! இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் நாளுக்கு ஒரு பேச்சுப் பேசறீங்க!" என்றாள் சிவகாமி.

"ஆமாம். ஒரு விஷயம் கவனிச்சேன். முன்னெல்லாம் காப்பி ரொம்ப சூடா வேணும்னு கேப்பே. ஒரு தடவை சூடு போறலேன்னு சொல்லி சர்வரை வேற காப்பி எடுத்துக்கிட்டு வரச் சொன்னே. இப்பல்லாம் காப்பியை இவ்வளவு ஆற வச்சுக் குடிக்கற. ஏன் அப்படி?" என்றான் முருகன், செல்வியுடன் ஓட்டலில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தபோது.

"ஒரு மாறுதலுக்காகத்தான், எல்லாத்துக்கும் காரணம் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா?" என்றாள் செல்வி.

"காரணம் இருக்கும். ஆனா நீ சொல்ல மாட்டே. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து பல விஷயங்கள்ள கவனிச்சிருக்கேன். நீ சரியான அழுத்தக்காரியாச்சே! செல்விங்கறதுக்கு பதிலா உனக்குக் கள்ளின்னு பேர் வச்சிருக்கலாம்."

"முருகனான உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கறதால, வள்ளிங்கற பேர்தான் எனக்குப் பொருத்தமா இருக்கும்!" என்ற செல்வி, ' காப்பி என் நெஞ்சுக்குள் இறங்கும்போது, என் நெஞ்சுக்குள் இருக்கும் உன் மீது சூடு படக் கூடாது என்பதற்காகத்தான் நான் காப்பியைச் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை விட்டு விட்டு, காப்பியை ஆற வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

பொருள்:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்


No comments:

Post a Comment

1304. பூங்கொத்துடன் வந்தவன்!

"என்னடி, முரளி ரெண்டு நாளா உன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம். "வேற ஏதாவது வேலை இருந்திருக்கும்"...