Saturday, March 20, 2021

1129. தூங்காத கண்ணென்று ஒன்று!

"என்ன பிரச்னை?" என்றார் டாக்டர்.

"டாக்டர் கொஞ்ச நாளா இவ சரியாவே தூங்கறதில்ல" என்றாள் சுகந்தியின் தாய் சாரதா.

"ஏம்மா, தூக்கம் வரதில்லையா?" என்றார் டாக்டர்.

"அப்படி ஒண்ணும் இல்ல, டாக்டர்" என்றாள் சுகந்தி.

டாக்டர் சுகந்தியைப் பொதுவாகப் பரிசீலித்து விட்டு, "பிரச்னை எதுவும் இருக்கறாதாத் தெரியல. நீ கல்லூரியில படிக்கிறியா?" என்றார்.

"ஆமாம்."

"அப்படீன்னா, படுக்கையில படுத்துக்கிட்டு ஏதாவது பாடப் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன்னா உடனே துக்கம் வந்துடுமே!" என்றார் டாக்டர் சிரித்தபடி.

"எங்கே டாக்டர், படுத்துக்கவே மாட்டேங்கறா? முழிச்சுக்கிட்டு கம்ப்யூட்டர் முன்னாலேயே உக்காந்திருக்கா" என்றாள் சாரதா.

"அதான் பிரச்னை. தூக்கம் வராட்டலும் தினமும்  குறிப்பிட்ட நேரத்துக்குப் படுத்துக்கப் போறதுன்னு பழக்கப்படுத்திக்கிட்டா தூக்கம் வர ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ள இந்தப் பிரச்னை சரியாயிடும்" என்றார் டாக்டர், அதுதான் தன் பிரிஸ்க்ரிப்ஷன் என்பது போல்.

"நேத்திக்கு சாயந்திரம் வீட்டுக்கு வரேன்னு சொன்னியே, ஏன் வரலை?" என்று சுகந்தியிடம் கேட்டாள் அவள் தோழி தேன்மொழி.

"டாக்டர்கிட்ட போயிருந்தேன்!" என்றாள் சுகந்தி.

"என்ன ஆச்சு? யாருக்கு உடம்பு சரியில்ல?"

"எனக்குத்தான்! எனக்குத் தூக்கமே வரலைன்னு சொல்லி எங்கம்மா என்னை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனாங்க."

"அப்படி ஒரு பிரச்னை இருக்கா உனக்கு? எனக்குத் தெரியாதே! டாக்டர் என்ன சொன்னாரு?"

"படுத்துக்கிட்டுக் கண்ணை மூடிக்கிட்டா தூக்கம் வரும்னு சொன்னாரு!"

"அவ்வளவுதானா? நீ அப்படிச் செய்ய வேண்டியதுதானே?"

"முடியாதுடி. ராஜேஷ் என் எதிரில இருந்தாலும்,இல்லாட்டாலும் அவன் உருவம் என் கண்ணிலேயே இருக்கு. கண்ணை மூடினா அவன் உருவம் மறைஞ்சுடுமோங்கற பயத்திலதான் என்னால கண்ணை மூடமுடியலியோ என்னவோ?" என்றாள்.

"உன் மேல தப்பு இல்லடி. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கானே உன் ஆள் ராஜேஷ் அவனைத்தான் குத்தம் சொல்லணும்" என்றாள் தேன்மொழி.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

பொருள்:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத ஊரார் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...