Saturday, January 22, 2022

1140. குமுதினிக்கு வந்த நோய்!

என் எதிர் வீட்டில் வசிக்கும் குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகப் பலரும் கூறினர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை.

குமுதினி எனக்கு நெருக்கமானவள் ஒன்றும் இல்லை. எதிர்வீட்டில் வசிப்பதால், இருவரும் சில சமயம் ஒருவரை ஒருவர் பார்க்கும்படி நேரும். அப்போதெல்லாம் அறிமுகமானவர்கள் என்று காட்டிக் கொள்ளும் வகையில், இருவரும் வலுவில் வரவழைத்துக் கொண்ட ஒரு புன்சிரிப்பைப் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். 

குமுதினிக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகச் சிலர் நினைப்பதற்குக் காரணம், சில நாட்களாக அவள் நடவடிக்கைகளில் காணப்பட்ட சில விசித்திரங்கள்தான்.

சாலையில் நடந்து போகும்போது, அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போகிறாளாம்.

அவள் வீட்டில் இருக்கும்போது, சில சமயம் ஒரு அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொள்வாள். அறைக்குள் அவள் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது போல் குரல் கேட்கும். சில சமயம் கோபமாகக் கத்துவாள், சில சமயம் கெஞ்சுவாள். சில சமயம் அறைக்குள்ளேயே அவள் ஓடுவது போல் காலடிச் சத்தம் பெரிதாகக் கேட்கும். 

ஒருமுறை, "எங்கே, என்னைப் பிடித்து விடு, பார்க்கலாம்" என்று சிரித்துக் கொண்டே உரத்த குரலில் கூவி விட்டு, அறைக்குள்ளேயே அவள் ஓடும் சத்தம் கேட்டு, அவள் அம்மா கதவைத் தட்டி இருக்கிறாள். 

கதவைத் தட்டியதும், சத்தமெல்லாம் நின்று அமைதியாகி விட்டது. இரண்டு நிமிடம் கழித்துக் கlவைத் திறந்த குமுதினி, ஒன்றுமே நடக்காதது போல், "என்னம்மா!" என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறாள்.

"என்ன சத்தம்? யாரோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய்?" என்று அவள் அம்மா கேட்டதற்கு, "அறைக்குள் எப்படியம்மா ஓடிப் பிடித்து விளையாட முடியும்? அதோடு இங்கே யாரும் இல்லையே!" என்று பதில் சொல்லி இருக்கிறாள் குமுதினி.

குமுதினியின் அம்மா இதைப் பற்றிப் பலரிடமும் சொல்லிப் புலம்பி இருக்கிறாள். அதனால் குமுதினியைப் பார்த்தாலே, பலரும் அவளைக் கேலி செய்வது போல் சிரிக்கிறார்கள்.

ஆனால், நான் அப்படிச் சிரிப்பதில்லை. குமுதினிக்கு என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியும். 

குமுதினிக்கு வந்திருப்பது காதல் என்னும் நோய். இந்த நோய் வந்தவர்கள் ஆரம்பத்தில் அதை வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அது பல விதங்களில் வெளிப்பட்டு, வெளி உலகத்துக்கு அவர்களைப் பைத்தியக்காரர்களாகக் காட்டி அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்க வைக்கும். 

காதல் விஷயம் பெற்றோருக்குத் தெரிந்து, அதை அவர்கள் அங்கீகரித்தால்தான் அந்த நோய் நீங்கும்.

என் விஷயத்தில் அப்படித்தானே நடந்தது? அப்போது இந்தக் குமுதினியும் என்னைப் பார்த்துச் சிரித்தவள்தானே!

இப்போது மற்றவர்கள் குமுதினியைப் பார்த்துச் சிரிக்கும்போது, நான் மட்டும் சிரிக்காமல் இருக்கும்போது, குமுதினி என்னைப் பார்க்கும் பார்வையில், 'அன்று உன்னைப் பார்த்துச் சிரித்தேனே! நீ அனுபவித்தவற்றை நான் அனுபவிக்கும்போதுதானே, நான் எவ்வளவு அறிவற்றவளாக இருந்திருக்கிறேன் என்று புரிகிறது!' என்ற அவள் எண்ண ஓட்டம் வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது. 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

பொருள்:
இந்த அறிவற்ற மக்கள் என் கண்ணுக்கெதிரிலேயே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

Read 'What Ails Kumudhini' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...