Thursday, January 20, 2022

1139. குதிரை வீரன்!

தமயந்தி தன் தாயுடன் அங்காடிக்குச் சென்றபோது, தன் தாய் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா, பாகற்காய் வாங்கலியா?" என்றாள் தமயந்தி.

அவளை வியப்புடன் பார்த்த அவள் தாய், "உனக்குத்தான் பாகற்காய் பிடிக்காதே? அப்புறம் ஏன் பாகற்காய் வாங்கலியான்னு கேக்கறே?" என்றாள்.

"இல்லை. அவருக்குப் பிடிக்குமே, அதனால, நானும் சாப்பிட்டுப் பழக்கிக்கலாம்னு பார்த்தேன்."

"அவருக்கா? எவருக்கு?" என்றாள் அவள் தாய், அவளை ஏறிட்டுப் பார்த்து.

சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்ட தமயந்தி, "அவருக்குன்னு சொல்லல அம்மா! அப்பாவுக்குன்னு சொன்னேன்" என்று சமாளிக்க முயன்றாள்.

"ஏண்டி, அப்பாவுக்கும்தான் பாகற்காய் பிடிக்காதே? உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதுங்கறதாலதான், நான் பாகற்காய் வாங்கறதையே விட்டுட்டேன்" என்றாள் அவள் அம்மா.

ன்னொரு முறை, தமயந்தி தன் தோழிகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு வீரன் குதிரை மீது சென்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, "இந்தக் குதிரை அவரோட குதிரைதானே? ஆனா, வேற யாரோ இல்ல அது மேல உக்காந்து போறாங்க?" என்றாள்.

"அவரோட குதிரைன்னா, யாரைச் சொல்ற?" என்றாள் தோழிகளில் ஒருத்தி.

"அதாண்டி, அன்னிக்கு நாம குளத்தில குளிச்சுக்கிட்டிருக்கறப்ப, குதிரைக்குத் தண்ணி காட்ட ஒத்தர் வந்தாரே? நாம குளிச்சுக்கிட்டிருக்கறதைப் பார்த்துட்டு, குதிரையைத் தண்ணி குடிக்க வச்சுட்டு, அவரு தள்ளிப் போய் நின்னுக்கிட்டாரே! எவ்வளவு கண்ணியமானவர்! அப்பதானே நான் அவரை முதல்ல பார்த்தேன். அப்புறம், கோவில்ல கூடப் பார்த்துப் பேசினேனே!" என்றாள் தமயந்தி.

தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"என்னடி உளர்ற? நாம குளத்தில குளிச்ச நாட்கள்ள அப்படி எதுவும் நடக்கவே இல்லையே!" என்றாள் இன்னொரு தோழி.

"ஓ! அப்படியா? அப்ப வேற தோழிகளோட குளிச்சபோது நடந்திருக்கும்."

"எங்களை விட்டா வேற தோழிகள் யாருடி உனக்கு?" என்றாள் தோழி.

"அப்படின்னா, என் அம்மாவோட குளிச்சுக்கிட்டிருந்தப்ப நடந்திருக்கும்!" என்றாள் தமயந்தி, தான் ஏன் இப்படி உளறுகிறோம் என்று நினைத்துக் கொண்டே.

"விடுங்கடி. இவளுக்கு ஏதோ ஆயிடுச்சு! இவ அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமே இவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டியதுதான்!" என்று ஒரு தோழி கூற, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

"அப்புறம், எல்லாக் குதிரையும் பாக்கறத்துக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால உண்மையில குதிரையோட வந்த ஒரு ஆளை நீ சந்திச்சிருந்தாலும், இது வேற குதிரையாக் கூட இருக்கலாம். அதனால, இதை நினைச்சுக் குழப்பிக்காதே!" என்றாள் இன்னொரு தோழி.

ன்று தமயந்தி தன் காதலனைச் சந்தித்தபோது, "என் காதலைப் பத்தி நான் யார்கிட்டேயும் சொல்லல. ஆனா, என் மனசில நான் பூட்டி வச்சிருக்கற காதல் எனக்குத் தெரியாமலே அப்பப்ப வெளியே வந்து, தன்னை எல்லோருக்கும் வெளிக்காட்டிக்கிட்டிருக்கு. அதனால, சீக்கிரமாவே என் வீட்டுக்கு வந்து என்னைப் பெண் கேளுங்க!" என்றாள்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல்   

குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

பொருள்:
நான் அமைதியாக இருப்பதால் என் காதலை எல்லோரும் அறியவில்லை என்று கருதி, என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Read 'The Man Riding A Horse' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...