Monday, March 2, 2020

1096. 'சுருக்' என்று தைத்த பேச்சு!

இரண்டு வருடங்கள் முன்பு சந்திரன் அந்த  நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், அவன் ஒரு பட்டதாரி என்பதை அறிந்து ம ற்ற ஊழியர்களுக்கு வியப்பு ஏற்பட்டது.

ஏனெனில் எழுதுபொருட்கள் விநியோகத்  தொழிலில் ஈடுபட்டு வந்த அந்தச் சிறிய நிறுவனத்தின்  ஊழியர்களில் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களே இரண்டு பேர்தான்!

நிறுவனத்தின் மேலாளர் கூட ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவர்தான். முதலாளியின் உறவினர் என்பதால் அவருக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது.

"பாவம்! படிச்சிருந்தும் நல்ல வேலை கிடைக்கல போல இருக்கு! அதனாலதான் இந்த சின்ன கம்பெனியில குறைஞ்ச சம்பளத்தில் வேலைக்கு சேந்திருக்கான்!" என்று சந்திரனைப் பற்றிப் பலர் நினைத்தனர். உண்மையும் அதுதான்!

சந்திரனின் கல்வியறிவினாலும், அவனுடைய இயல்பான புத்திசாலித்தனத்தாலும், வேலையில் அவன் காட்டிய ஆர்வத்தினாலும் அவனால் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் சில முன்னேற்றங்களைக்  கொண்டு வர முடிந்தது. இது நிறுவனத்தின் வியாபார வளர்ச்சிக்கும் உதவியது.

தன சக ஊழியர்களிடம் இனிமையாகப் பழகியதும், வேலையில் அவன் அவர்களுக்கு உதவியதும் அவன் மீது மற்றவர்களுக்கு மதிப்பம் அன்பும் ஏற்பாடச் செய்தது. ஆயினும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரோ, மேலாளரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கான அவனுடைய பங்களிப்பைக் கண்டுகொண்டதாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.

லுவலகம் தொடர்பான கடிதப் போக்குவரத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சந்திரனுடையது. ஸ்டெனோ சியாமளாவை அழைத்து அவன் கடிதங்களை டிக்டேட் செய்வான். அவள் கடிதங்களை டைப் அடித்து அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போவாள்.

சியாமளாவிடம் சந்திரனுக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவள் அவனைப் பார்த்துப் புன்னகை கூடச் செய்ததில்லை. அவன் கடிதங்களை டிக்டேட் செய்யும்போது தலை குனிந்து அவன் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டிருப்பாள். டைப் செய்யப்பட்ட கடிதங்களை  அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போகும்போது கூட அவன் முகத்தைப் பார்க்க மாட்டாள். அவன் "தாங்க்ஸ்" என்று சொல்வதைக் கூடக் காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் சென்று விடுவாள்.

சியாமளாவுக்குத் தன் மீது இருப்பது அலட்சியமா, வெறுப்பா என்று சந்திரனுக்குப் புரியவில்லை. அதற்குக் காரணமும் புரியவில்லை. தான் அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் என்ன ஆகும் என்று யோசித்தான். அடுத்த முறை அவளுக்குக் கடிதம் டிக்டேட் செய்யும்போது அவளுக்கு மட்டும் கேட்கும்படி 'ஐ லவ் யூ' என்று சொல்ல முடிவு செய்தான்.

ஆனால் அதற்குள் வேறொரு சம்பவம் நடந்து விட்டது.

லுவலக லஞ்ச் அறையில் சியாமளாவும் லதா என்ற இன்னொரு பெண்ணும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். "நம்ம சந்திரன் சார் ரொம்ப புத்தியசாலி, இல்ல?" என்றாள் லதா.

அப்போது அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த சந்திரனின் காதில் அது விழுந்தது.  இதற்கு சியாமளா என்ன சொல்லப் போகிறாள் என்று கேட்க எண்ணி அறை  வாசலில் மறைவாக நின்றான் சந்திரன்.

"என்னைப் பொறுத்தவரையில முட்டாளா இருந்தாக் கூடப் பரவாயில்ல, முயற்சி செய்யாதவரா இருக்கக் கூடாது. அவர் ஒரு சோம்பேறி!" என்றாள் சியாமளா.

அடிபட்டவனாக சந்திரன் அங்கிருந்து நகர்ந்தபோது சியாமளா திரும்பி அவனைப் பார்த்தது போல் இருந்தது.

'நான் நின்றிருந்ததை முன்பே பார்த்து விட்டு வேண்டுமென்றுதான் அப்படிச் சொல்லி இருப்பாளா? அப்படியென்றால் என் மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பு எனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னாளா?'

சந்திரனுக்குப் புரியவில்லை.

அதற்குப் பிறகு அவன் அவளுக்கு டிக்டேஷன் கொடுத்தபோது அவள் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

சந்திரன் மனம் உடைந்து போனான்.

சில நாட்கள் கழித்து ஒருநாள் சியாமளா டைப் அடித்த கடிதங்களை அவன் மேஜை மீது வைத்து விட்டுப் போனபோது அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தது போல் இருந்தது.

உண்மையாகவே சிரித்தாளா அல்லது தன் பிரமையா என்று யோசித்தபடி சந்திரன் டைப் அடித்த கடிதங்களை எடுத்துப் பார்த்தான்.

மேலே இருந்த கடிதத்துடன் ஒரு பத்திரிகை விளம்பர கட்டிங் குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது.

எழுது பொருட்கள் விநியோகத் தொழில் ஈடுபட்டிருந்த ஒரு மிகப் பெரிய அகில இந்திய நிறுவனத்துக்கு கிளை மேலாளர் தேவை என்ற விளம்பரம் அது!

ஓ! அப்படியானால், என்னை சோம்பேறி, முயற்சி இல்லாதவன் என்றெல்லாம் சொன்னது நான் ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற அக்கறையினால்தானா? அப்படியானால், அவளுக்கு என்மீது இருப்பது  அன்புதான்,வெறுப்பு இல்லை!'

சியாமளாவின் இருக்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான் சந்திரன். அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடியே கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

பொருள்:
வெளித்தோற்றத்துக்கு அவள் பகைவர் போல் அன்பில்லாத சொற்களைப் பேசுவது போல் தோன்றினாலும், அவை மனதில் பகை இல்லாதவரின்  சொற்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...