"இல்லடி. கல்யாணமான இந்த ஒரு வருஷத்தில அவர் என்னை விட்டு ஒருநாள் கூடப் பிரிஞ்சதில்ல. ஆனா, இப்பதான் ரெண்டு வாரம் ஆஃபீஸ் டூர்னு போயிருக்காரு. போய்ப் பத்து நாள் ஆச்சு. இந்தப் பத்து நாள்ள, ஒரே ஒரு லெட்டர்தான் போட்டாரு. அதுக்கு பதில் போட்டேன். மறுபடியும், அவர்கிட்டேந்து பதில் வரல. அவரோட லெட்டரைப் படிச்சாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றாள் சுசீலா.
"எனக்கும்தான் கல்யாணம் ஆகி இருக்கு. எனக்கு என் புருஷன் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வர மாட்டாரான்னு இருக்கும். நீ என்னடான்னா..."
"உண்மையாவா சொல்ற? புருஷனை விட்டுப் பிரிஞ்சிருக்கறதில அவ்வளவு சந்தோஷமா உனக்கு?" என்றாள் சுசீலா, வியப்புடன்.
"சில சமயம் அப்படித் தோணும். ஆனா, அவர் ரெண்டு நாள் எங்கேயாவது போயிட்டு வந்தாக் கூட, எப்ப திரும்பி வருவார்னு ஏக்கமாத்தான் இருக்கும்!" என்றாள் கமலி.
"பின்னே?"
"சும்மா உன்னை சீண்டிப் பாக்கறதுக்காக அப்படிச் சொன்னேன். கவலைப்படாதே! அவர்தான் நாலஞ்சு நாள்ள வந்துடுவாரே!"
ஐந்து நாட்கள் கழித்து, சுகுமாரன் திரும்பி வந்தான். மாலையில் இருவரும் ஓய்வாக நடந்து கொண்டிருந்தபோது, "என்னங்க, பதினைஞ்சு நாள் என்னைப் பிரிஞ்சிருந்தது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்றாள் சுசீலா.
"உன் பிரிவுத் துயர் தாங்காம, ஆஃபீஸ் வேலையைப் பாதியிலேயே விட்டுட்டு ஓடி வந்துடலாமான்னு நினைச்சேன்!" என்றான் சுகுமாரன்.
"உண்மையாவா?" என்றாள் சுசிலா, பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.
"நீ வேற! நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சு. ஒத்தரை விட்டு ஒத்தர் கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கறது ஒரு நல்ல மாறுதல் இல்லையா? எனக்கு அப்படித்தான் இருந்தது. உனக்கும் அப்படித்தானே இருந்திருக்கும்?"
"இல்லீங்க. எனக்கு நீங்க இல்லாத பத்து நாளும் ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்களை எப்ப பாக்கப் போறோம்னு ஏக்கமா இருந்தது" என்றாள் சுசீலா, ஏமாற்றத்துடன்.
"இதெல்லாம் ஒரு கற்பனைதான். ஈருடல், ஓருயிர்னெல்லாம் நாவல்கள்ள படிச்சுட்டும், சினிமாவில கேட்டுட்டும் நீயா கற்பனை பண்ணிக்கிட்டிருக்க. உண்மையில, நான் பதினைஞ்சு நாள் இல்லாம இருந்தது உனக்கு ஒரு பெரிய ரிலீஃபாத்தான் இருந்திருக்கும். இந்தப் பதினைஞ்சு நாள்ள, நீ ஒரு சுற்றுப் பெருத்திருக்கியே!" என்றான் சுகுமாரன், சிரித்துக் கொண்டே.
சுசீலா அடிபட்டவள் போல் கணவன் முகத்தைப் பார்த்தாள். அவன் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையாகவே அவன் அப்படித்தான் நினைக்கிறான் என்பதை உணர்ந்தபோது, தன்னைப் பிரிந்திருந்தது கணவனுக்கு வருத்தத்தை அளிக்காவிட்டாலும், அவனைப் பிரிந்திருந்தது தனக்கு வருத்தம் அளித்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்ளாதது அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
கற்பியல்
No comments:
Post a Comment