Saturday, September 24, 2022

1145. பூங்குழலியின் போதை!

"இந்தக் குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொல்லி உங்கிட்ட எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டிருக்கேன். நிறுத்த மாட்டேங்கறியே!" என்றாள் பூங்குழலி.

"முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன், ஆனா முடியல. அந்த போதை வேண்டி இருக்கே!" என்றான் இளங்குமரன்.

"உனக்கு மட்டும் ஏன் போதை வேண்டி இருக்கு? எனக்கு வேண்டி இருக்கலையே!"

"எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேண்டித்தான் இருக்கும். உனக்கு போதை கொடுக்கற விஷயம் எதுன்னு எனக்குத் தெரியல!"

"உன்னால குடிப்பழக்கத்தை விட முடியலைங்கறதுக்காக எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை வேணும்னு சொல்லாதே!" என்ற பூங்குழலி, சற்றுத் தொலைவில் எதையோ பார்த்து விட்டு, "இங்கேயே ஒரு ஓரமா நில்லு. நான் இதோ வந்துடறேன்!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு பூங்குழலி திரும்பி வந்ததும், "எங்கே போயிட்டு வந்தே?" என்றன் இளங்குமரன்.

"அங்கே ரெண்டு பெண்கள் நம்மைப் பாத்து ஏதோ பேசற மாதிரி தெரிஞ்சது. பக்கத்தில போய் அவங்களுக்குப் பின்னால நின்னு என்ன பேசறாங்கன்னு கேட்டுட்டு வந்தேன்."

"என்ன பேசினாங்க"

"என்னதைப் பேசுவாங்க? நீயும் நானும் சேர்ந்து சுத்திக்கிட்டிருக்கமாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு சுத்தினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க."

"என்னைப் பத்தி ஏன் வம்பு பேசறீங்கன்னு அவங்ககிட்ட சண்டை போட்டுட்டு வந்தியா?"

"நான் எதுக்கு சண்டை போடணும்? அவங்க உண்மையாத்தானே பேசறாங்க?" என்றாள் பூங்குழலி வெட்கம் கலந்த சிரிப்புடன்.

"நான் உன் பின்னால வந்து உன்னை கவனிச்சேன். அவங்க பேசினதைக் கேட்டப்ப உன் முகத்தில தெரிஞ்ச ஆனந்தத்தை கவனிச்சேன்!" என்றான் இளங்குமரன் சிரித்தபடியே.

"இப்படிப்பட்ட திருட்டு வேலையெல்லாம் செய்யறியா நீ?" என்றாள் பூங்குழலி பொய்க் கோபத்துடன்.

"நீ மட்டும்என்ன செய்யற? நம்மைப் பத்தி யார் வம்பு பேசறாங்கன்னு தேடிப் போய்ப் பாத்து அவங்க பேசறதைக் கேட்டு ரசிச்சுக்கிட்டு வர. அதில உனக்கு ஒரு போதை கிடைக்குதுன்னு நினைக்கிறேன்."

"போதையும் இல்ல, எதுவும் இல்ல,"

"இல்லை போதைதான். அந்தப் பேச்சைக் கேட்கும்போது உன் கண்ணு சொக்கறதைப் பார்த்தே நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குக் கள்ளு குடிக்கிறதில கிடைக்கிற போதை உனக்கு மத்தவங்க நம்ம காதலைப் பத்திப் பேசறதைக் கேக்கறதில கிடைக்குது!" என்றான் இளங்குமரன்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

பொருள்:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...