Sunday, September 25, 2022

1146. ஒரே நாள் உனை நான்....

"இன்னிக்கு சந்திர கிரகணம். எங்கேயும் வெளியில போகாதே!" என்றாள் அலர்மேல் மங்கை தன் மகள் செல்வியிடம்.

"ஏன் கிரகணத்தப்ப வெளியில போகக் கூடாது?" என்றாள் செல்வி.

"எதுக்கெடுத்தாலும் எதிர்த்துக் கேள்வி கேக்காதே! இந்த ராத்திரியில நீ எதுக்கு வெளியில போகணும்?"

"நான் எங்கேயும் போகப் போறதில்லம்மா! கிரகணத்தப்ப ஏன் வெளியில போகக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேக்கறேன்."

"ஏன்னா, நான் உங்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்! அதுவும் உங்கப்பா வரத்துக்குள்ள பேசணும்!" என்றாள் அலர்மேல் மங்கை.

"பேசு! அதுக்கு ஏன் கிரகணத்தைக் காரணம் சொலற?" என்ற செல்வி முற்றத்துக்குப் போய் வானத்தைப் பார்த்து விட்டு, "இப்பதான் கிரகணம் பிடிக்க ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. அதுக்குள்ள பாதி நிலாவை முழுங்கிடிச்சே இந்த ராகு!" என்றாள்.

"ஆமாம். இன்னும் அரை மணியில முழுசாப் புடிச்சுடும்னு நினைக்கிறேன்" என்ற அலர்மேல் வள்ளி, மகளின் தோளைப் பிடித்து அழுத்தி, "இப்படி உக்காரு" என்றாள்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "செல்வி! நீ  பெருமாளைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும். உங்கப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கறேன். அதுவரைக்கும் அவனோட அதிகமாப் பழகாதேன்னு உங்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா?" என்றாள் அலர்மேல் வள்ளி.

"ஆமாம்மா! நீ சொன்னபடிதானே நடந்துக்கிறேன்!"

"பொய் சொல்லாதேடி! நீ பெருமாளோட குளத்தங்கரையில உட்கார்ந்து பேசினதைப் பெரியநாயகம் பாத்திருக்கா. 'என்ன மங்கை, உன் பொண்ணு பெருமாளோட சுத்திக்கிட்டிருக்காளே!'ன்னு அவ எங்கிட்ட வந்து சொல்றா."

"ஏம்மா, பெருமாளைப் பாக்கப் போறேன்னு  உங்கிட்ட சொல்லிட்டுத்தானே போனேனன்?" என்றாள் செல்வி சற்றே கோபத்துடன்.

"ஒரு நாளைக்கு எங்கிட்ட சொல்லிட்டுப் போன. சரி. அப்புறம் ஒருநாள் உங்களைக் கோவில்ல பார்த்ததா கோமளம் வந்து சொன்னாளே, அது?"

"அப்புறம்?"

"இன்னொரு நாள் நீங்க ஆத்தங்கரை ஓரமா நடந்து போனதைப் பார்த்ததா பர்வதம் வந்து சொன்னா!"

"இன்னும் யார் என்ன சொன்னாங்க? எல்லாத்தையும் சொல்லிடு!" என்றாள் செல்வி. இப்போது அவள் முகத்தில் கோபம் மறைந்து ஒருவித குறும்பு குடிகொண்டிருந்தது.

"ஏண்டி, நான் என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன், ஒவ்வொருத்தர் சொன்னதையும் விவரிச்சுச் சொல்ல? ரெண்டு மூணு நாள் நீ பெருமாளோட சுத்தறதை மத்தவங்க பாத்திருக்காங்கன்னு சொல்றேன். அது போதாதா? அதுக்கு என்ன சொல்ற?" என்றாள் அலர்மேல்மங்கை கோபத்துடன்.

செல்வி பெரிதாகச் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கிற? சிரிக்கிற விஷயமா இது?"

"அம்மா, அம்மா! நான் பெருமாளை வெளியில சந்திச்சது ஒருநாள்தான். கோவிலுக்குப் போனோம். கொஞ்ச நேரம் குளத்தங்கரையில உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கொஞ்ச நேரம் ஆத்தங்கரை ஓரமா நடந்தோம்.  வேற எங்கேயாவது மரத்தடியில கூட உட்கார்ந்திருக்கலாம். இந்த ஒரு நாள் சந்திப்பை ஏதோ பல நாள் நடந்த மாதிரி எந்த ஊர்க்காரங்க பேசறாங்கன்னா, நீயும் அதைக் கேட்டுட்டு என்னைக் கண்டிக்க வரியே! உன் பேச்சை மீறி நான் எப்பவுமே நடந்துக்க மாட்டேம்மா!" என்று சொல்லித் தாயின் முகத்தைத் தன் கைகளால் அன்புடன் அழுத்தினாள் செல்வி.

உடனே முற்றத்துக்கு ஓடி நிலவைப் பார்த்தவள், "அம்மா, இங்கே பாரேன்! இந்தப் பாம்பு நிலாவை முக்கால்வாசி முழுங்கிடுச்சு!" என்று கூவினாள் உற்சாகமாக.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

பொருள்:
காதலரைக் கண்டது ஒருநாள்தான், அதனால் உண்டாகிய அலரோ (ஊர்ப்பேச்சோ), திங்களைப் பாம்பு கொண்டது போல் எங்கும் பரந்து விட்டது.

குறள் 1147 (விரைவில்)
அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...