"போனா என்ன? வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கணுமா என்ன?" என்றாள் அவன் மனைவி அமுதா.
"வசந்தி வெளியே போயிட்டு வந்தப்பல்லாம், நீதானே அவளைக் கண்டிச்சுக்கிட்டு இருந்த? அதனாலதான் கேட்டேன்."
"அவ யாராவது பையனைப் பாக்கப் போகக் கூடாதுன்னுதான் முன்னெச்சரிக்கையா கண்டிச்சு வச்சேன், ஏன்னா, இந்த வயசுல பெண்களுக்கு இந்தக் காதல் ஏற்படறது இயற்கைதானே?" என்றாள் அமுதா.
"உன் சொந்த அனுபவத்திலதானே பேசற?" என்றான் செல்வம், கேலியாக.
"ஆமாங்க! சொந்த அனுபவம்தான். அதனாலதானே எனக்கு நீங்க கிடைச்சீங்க! வசந்தி காதல் கீதல்னெல்லாம் அலையக் கூடாதுன்னுதான், அவ வேற எதுக்காவது வெளியில போனா கூட, அவ யாரையோ பாக்கப் போறதா சந்தேகப்படற மாதிரி அவகிட்ட கடுமையாப் பேசினேன்."
"இப்ப மட்டும் எப்படி அனுமதிக்கிற?"
"நான் கடுமையாப் பேசி, அவகிட்ட ஒரு பயத்தை ஏற்படுத்திட்டேன் இல்ல? அதனால, அவ இனிமே ஒழுங்கா இருப்பா. இப்ப அவ வெளியே போறதெல்லாம், அவ தோழியோடு சேந்து படிக்கத்தான்!" என்றாள் அமுதா.
"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்ற?" என்று செல்வம் கூறிக் கொண்டிருந்தபோதே, வாசலில் பக்கத்து வீட்டு அஞ்சுகம் வந்து நின்றாள்.
"அமுதா! உங்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்" என்றாள் அஞ்சுகம்.
அமுதா அஞ்சுகத்தை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குச் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு வந்தாள்.
அஞ்சுகம் சென்றதும், "என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க? அஞ்சுகம் என்ன சொன்னாங்க?" என்றான் செல்வம்.
"வசந்தி என்னை நல்லா ஏமாத்தி இருக்கா. அவ தோழியோட சேந்து படிக்கப் போகல. காதலனைச் சந்திக்கத்தான் போயிக்கிட்டிருக்கா. அவளை ஒரு பையனோட அடிக்கடி பாக்கறதா ஊர்ல சில பேரு பேசறாங்களாம். அது அஞ்சுகம் காதில விழுந்திருக்கு. அதான் வந்து சொல்லிட்டுப் போறா!" என்றாள் அமுதா, பதட்டத்துடன்.
"முதல்ல நீ கண்டிச்ச. இப்ப ஊர்ல வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே அவங்க காதல் நல்லாவே வளரும்!" என்றான் செல்வம்.
"என்னங்க இது, பொறுப்பு இல்லாம பேசறீங்க?" என்றாள் அமுதா, கோபத்துடன்.
"இது மாதிரி பெற்றோர் கண்டிக்கிறது, ஊர்க்காரங்க பேசறது இதெல்லாம் காதல் பயிருக்கு நீர் பாய்ச்சி உரம் போடற மாதிரிதான். நீ சின்ன வயசில உன்னோட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்த மாதிரி, உன் பொண்ணும் செய்யறா. இதில பதட்டப்படறதுக்கு என்ன இருக்கு? யார் என்னன்னு விசாரிச்சு, நல்ல பையனா இருந்தா, கட்டிக் கொடுத்துட வேண்டியதுதான்!" என்றான் செல்வம், சிரித்தபடி.
பொருள்:
இந்தக் காம நோய், ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் ,அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு, செழித்து வளர்கின்றது.
No comments:
Post a Comment