Monday, June 13, 2022

1143. உள்ளூர் கிசுகிசு!

"நம்ம ஊர்ல ஒரு கையெழுத்துப் பத்திரிகை வருதே, தெரியுமா உனக்கு?" என்றான் முரளி, அவன் நண்பன் கல்யாணராமனிடம்.

"தெரியாதே! என்ன பத்திரிகை?" என்றான் கல்யாணராமன்.

"உள்ளூர் கிசுகிசு!"

"பேரே ஒரு மாதிரி இருக்கே! என்ன பத்திரிகை இது?"

"பேர்ல இருக்கற மாதிரிதான்! ஊர்ல நடக்கிற ரகசியமான விஷயங்கள், வதந்திகள் போன்ற விஷயங்களை வெளியிடுவாங்க!"

"எப்படி இதை நடத்தறாங்க, எப்படி சர்க்குலேட் பண்றாங்க?"

"வாரா வாரம் பத்து பக்கம் கையால எழுதி வெளியிடுவாங்க. இதைத் தொடர்ந்து படிக்கிறவங்க இருக்காங்க, புதுசா சேருகிற வாசகர்களும் இருக்காங்க. ஒவ்வொத்தரும் தாங்க படிச்சப்புறம், வேற யார்கிட்டயாவது கொடுப்பாங்க. அப்படித்தான் சர்க்குலேஷன் ஆகுது."

"அது சரி. அவங்களுக்கு எப்படி விஷயங்கள் கிடைக்கும்? அதோட, இப்படியெலாம் எழுதறது அவதூறு இல்லையா?"

"செய்திகளை எப்படிச் சேகரிக்கறாங்கங்கறது எனக்குத் தெரியாது. நீயும் நானும் பேசறதை ஒட்டுக் கேட்டு, அதைக் கூட "உள்ளூர் கிசுகிசு பற்றி நண்பர்கள் உரையாடல்"னு செய்தி போடலாம்! யாரோட பெயரையும் நேரடியா வெளியிட மாட்டாங்க. ஆனா, படிக்கிறவங்க புரிஞ்சுக்கிற மாதிரி எழுதுவாங்க. உதாரணமா, 'சிவபெருமானின் இளைய குமாரன் தெருவில் வசிக்கும் தசரதகுமாரரின் மனைவி, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார்'னு எழுதினா, சுப்பிரமணியம் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவின்னு எல்லாரும் புரிஞ்சுப்பாங்களே! அவங்க உண்மையாகவே ஊருக்குப் போயிருந்தா, செய்தி உறுதியான மாதிரி இருக்குமே!"

"அடப்பாவிங்களா! அப்ப, அந்த ராமசாமி அதைப் படிச்சுட்டுக் கோவிச்சுக்க மாட்டாரா?"

"அப்படிக் கோவிச்சுக்கிட்டு சண்டை போட்டா, அவர் தன்னையே காட்டிக் கொடுத்துக்கிட்ட மாதிரிதானே இருக்கும்? அதனால, திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி பேசாம இருப்பாரு. அதோட, இதை வெளியிடறவங்க யாருன்னு தெரியாதபோது, யார்கிட்ட போய் சண்டை போட முடியும்?"

"இது ரொம்ப அநியாயமா இருக்கே! என்னைப் பத்தி ஏதாவது எழுதினா நான் அந்தப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு போலீசுக்குப் போயிடுவேன். அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க!"

"அப்படின்னா, நீ போலீசுக்குப் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!"

"என்னடா சொல்றே?" என்றான் கல்யாணராமன்.

"இதோ பார்!" என்ற முரளி, தன் கையில் வைத்திருந்த 'உள்ளூர் கிசுகிசு' இதழைப் பிரித்து, அதிலிருந்த செய்தியைப் படித்தான்.

"மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும் திருமண அழகர், தனியார் நிறுவனத்தில் டைப் அடிக்கும் பச்சைக்கல் நங்கையைத் திருட்டுத்தனமாகக் காதலிக்கிறார். பச்சைக்கல்லின் தந்தை மலையைப் போல் கடினமானவர் என்பதால், அவரை அண்ணாந்து பார்த்துத் தன் காதலைச் சொல்ல அழகர் அஞ்சுகிறார்!" என்று படித்த முரளி, "இன்னும் கொஞ்சம் விவரங்கள் கீ இருக்கு!" என்றான்.

"அடப்பாவி! கல்யாணசுந்தரம், மரகதம், அவ அப்பா அண்ணாமலை எல்லார் பெயரும் சுலபமாப் புரியற மாதிரி எழுதி இருக்காங்களே!" என்றான் கல்யாணசுந்தரம்.

"இந்தா, பத்திரிகை! போலீசுக்குப் போறதுன்னா போ!" என்றான் முரளி, சவால் விடுவது போல்.

கல்யாணசுந்தரம் தயக்கத்துடன் 'உள்ளூர் கிசுகிசு'வைக் கையில் வாங்கிக் கொண்டான்.

டுத்த நாள் கல்யாணசுந்தரத்தைப் பார்க்க வந்த முரளி, "என்ன, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனியா?" என்றான்.

"இல்லை!"

"ஏன் போகல?"

"இந்தப் பத்திரிகை வந்து ஒரு வாரம் ஆயிடுச்சு. இதை நிறைய பேர் படிச்சிருப்பாங்க. நான்தான் இதைக் கடைசியாப் பாத்திருப்பேன் போல இருக்கு!"

"சரி, என்ன செய்யப் போற?"

"இந்தப் பத்திரிகையை வெளியிடறவங்க யாருன்னு தெரிஞ்சா, அவங்களைப் பார்த்து..."

"கழுத்தை நெரிக்கப் போறியா?"

"இல்லை, நன்றி சொல்லப் போறேன்!"

"எதுக்கு?"

"அவங்க எழுதினபடி, மரகதத்தோட அப்பாகிட்ட என் காதலைச் சொல்ல நான் பயந்துகிட்டுதான் இருந்தேன். இந்த 'உள்ளூர் கிசுகிசு' மூலமா அவர் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, மரகதத்துக்கிட்ட கேட்டிருக்காரு. மரகதம் எங்க காதலைப் பத்தி சொன்னதும், எங்க அப்பா அம்மாவை அழைச்சுக்கிட்டு பெண் கேக்க என்னை வரச் சொல்லி இருக்காரு. நேத்திக்கு சாயந்திரம்தான் மரகதம் எங்கிட்ட விஷயத்தைச் சொன்னா. அதனால, என் காதல் நிறைவேற உதவி செய்த 'உள்ளூர் கிசுகிசு'வுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?" என்றான் கல்யாண சுந்தரம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

பொருள்:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணம் செய்து கொள்ள) முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...