"என்னைப் பிரிந்து கடல் கடந்து சென்று பொருள் ஈட்டத்தான் வேண்டுமா?" என்றாள் ஊர்மிளை.
"திருமணத்துக்குப் பிறகு நாம் மகிழ்ச்சியாக வாழப் பொருள் வேண்டாமா? நான் ஒரு வணிகன். பெரும் பொருள் ஈட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது, அதைத் தவற விடலாமா?" என்றான் வளவன்.
"இங்கேயே உன் வணிகம் நன்றாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது! நீ இங்கே ஈட்டும் பொருள் நம் இருவருக்கும் போதாதா?"
"நம் இருவருக்கும் போதும். ஆனால் நமக்குப் பிறக்கப் போகும் இருபது குழந்தைகளுக்கும் போதுமா?"
"இருபது குழந்தைகளா! அப்படியானால், எனக்குத் திருமணமே வேண்டாம்!"
"சரி. இரண்டு என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆண்டுதான். ஓடி விடும்! ஓடி வந்து விடுவேன்."
"உனக்கு ஓடி விடும். ஏனென்றால், நீ ஓடிக் கொண்டிருப்பாய்! உன் வரவை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கப் போகும் எனக்கு, நாழிகைகள் நகர்வதே நத்தையின் நகர்வு போல்தான் இருக்கும்."
"கவலைப்படாதே! நான் போகும் இடத்திலிருந்து வணிகர்கள் பலர் இங்கே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அங்கிருந்து வரும் ஒவ்வொரு மரக்கலத்திலும் யார் மூலமாகவாவது ஒரு மடல் எழுதி அனுப்புகிறேன். அவர்கள் மூலமே நீ எனக்கு பதிலும் அனுப்பலாம். அதனால், நாட்கள் நகர்வது கடினமாக இருக்காது."
வளவன் கிளம்பிச் சென்று சுமார் ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து ஊர்மிளைக்கு ஒரு மடல் வந்தது. மடலில் தன் அன்பையும், காதலையும் கொட்டி எழுதியிருந்தான் வளவன்.
மடலை ஊர்மிளையிடம் கொடுத்த வணிகர், "இன்னும் 10 நாட்களில் நான் அங்கே திரும்பிச் செல்ல இருக்கிறேன், நீ அவனுக்கு பதில் மடல் எழுதி வை. கிளம்பு முன் நான் வந்து பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
ஆனால் அவர் திரும்பி வந்து கேட்டபோது, "மடல் எதுவும் இல்லை என்று வளவரிடம் சொல்லி விடுங்கள்" என்று சொல்லி விட்டாள் ஊர்மிளை..
மூன்று மாதங்களுக்குப் பிறகு, வளவனிடமிருந்து இன்னொரு மடல் வந்தது. இன்னொரு வணிகர் மூலம் தன் இரண்டாவது மடலை அனுப்பி இருந்தான் வளவன். வழக்கமான காதல் வரிகளுக்குப் பிறகு, "நான் உன்னை விட்டுப் பிரிந்த கோபம் உனக்கு இன்னும் தீரவில்லை போலிருக்கிறது. இப்போதாவது கோபம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று மடலை முடித்திருந்தான் வளவன்.
இந்த முறையும், ஊர்மிளை பதில் மடல் அனுப்பவில்லை.
அதற்குப் பிறகு வளவனிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை.
ஒரு ஆண்டுக்குப் பிறகு, வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய வளவன், ஊர்மிளையின் வீட்டுக்கு வந்தான்.
அவனை வரவேற்ற ஊர்மிளையின் தாயிடம், "ஊர்மிளை எப்படி இருக்கிறாள்?" என்றான் வளவன்.
"நீயே போய்ப் பார்!" என்றாள் அவள், விரக்தியான குரலில்.
உள்ளே சென்ற வளவன் அதிர்ந்து போய் நின்றான்.
கயிற்றுக் கட்டிலில் சேலை கட்டப்பட்ட எலும்புக் கூடு போல் படுத்திருப்பது ஊர்மிளையா?
அறைக்குள் யாரோ வரும் அரவம் கேட்டு விழித்த ஊர்மிளை, சட்டென்று எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தாள். பிறகு ஏதோ வேகம் வந்தவள் போல், கட்டிலிலிருந்து எழுந்து சில அடிகள் ஓடி வந்து வளவனை இறுக அணைத்தபடி, அவன் மார்பில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.
"என்ன ஊர்மிளை, ஏன் இப்படி இளைத்து விட்டாய்? உன் உடம்புக்கு என்ன? என் மடல்களுக்கு ஏன் பதில் மடல் அனுப்பவில்லை? என் மீது அத்தனை கோபமா?" என்றான் வளவன், படபடப்புடன்.
தலையை நிமிர்த்தி வளவனைப் பார்த்த ஊர்மிளை, "கோபமா? இந்த முகத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் எப்படி உயிரோடு இருந்தேன் என்று என் மேல்தான் கோபம்!" என்றாள்.
"நீ என் மடலுக்கு பதில் மடல் அனுப்பி இருந்தால், நானும் மடல்கள் அனுப்பிக் கொண்டு இருந்திருப்பேன், அது உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அல்லவா?"
"நிச்சயமாக ஆனால் வணிகத்துக்குச் சென்றிருக்கும் நீ, வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும். உன் முதல் மடலில் பொங்கி வழிந்த காதலைக் கண்டபோது, என் பதில் மடல்கள் உன் காதல் நினைவுகளை அதிகமாக்கி உன் மனத்தை வணிகத்தில் முழுமையாக ஈடுபடச் செய்யாமல் செய்து விடும் என்று தோன்றியது. அதனால்தான், உனக்கு மடல் அனுப்பாமல், பிரிவுத் துயரை முழுவதுமாக அனுபவிக்க முடிவு செய்தேன். ஆனால், என் மனதுக்கு இருந்த உறுதி உடலுக்கு இல்லாததால், அது உன் பிரிவால் வாடி இளைத்து விட்டது. இப்போது நீ வந்து விட்டாய் அல்லவா? இனி என் உடல் நிலை தேறி விடும், இப்போதே பருக்க ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். என் உடை இறுக்கமாகி விட்டது போல் உணர்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தபடியே, வளவனை மீண்டும் இறுகத் தழுவிக் கொண்டாள் ஊர்மிளை.
பொருள்:
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமை உடைய பிறவி இல்லை.
No comments:
Post a Comment