Monday, March 29, 2021

1132. காத்திருந்த கண்களே!

நர்மதா!

ஒரு சினிமா தியேட்டரில்தான் பழனி அவளைப் பார்த்தான். 

தியேட்டரில் அவன் உட்கார்ந்திருந்தபோது ஒரு இருக்கை தள்ளி அவள் அமர்ந்திருந்தாள். கடைசி வரை அந்த இருக்கை காலியாகத்தான் இருந்தது.

 படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் வரை கூட அந்தப் பெண் உள்ளே வருபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளுடன் வர வேண்டிய யாரோ வரவில்லை என்று அவன் புரிந்து கொண்டான். 

படத்தின் சில காட்சிகளை ரசித்தபோது அவள் தற்செயலாகத் திரும்பி அவனைப் பார்த்தது போல் தோன்றியது.

இடைவேளையின்போது அவள் அவன் பக்கம் திரும்பி, "எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?" என்றாள்.

"என்ன? காப்பி, டீ ஏதாவது வாங்கிக்கிட்டு வரணுமா?" என்றான் பழனி.

அவள் பெரிதாகச் சிரித்து விட்டு, "அதில்லை! என் தோழி வரதாச் சொன்னா. ஆனா வரலை. படம் முடிஞ்சதும் பஸ் ஸ்டாப் வரை துணைக்கு வர முடியுமா?" என்றாள்.

'சாயந்திர வேளையில் எதற்குத் துணை' என்று மனதில் தோன்றிய கேள்வியைப் புறம் தள்ளி விட்டு, "ஓ, நிச்சயமா!" என்றான் பழனி.

தியேட்டரிலிருந்து பஸ் நிறுத்தம் அதிக தூரம் இல்லை.

"ஒரு பொண்ணு தனியா நடந்து போனா, யாராவது வந்து வம்பு பண்ணுவாங்க. அதுக்குத்தான் உங்களைத் துணைக்கு வரச் சொன்னேன்" என்றாள் அவள் நடந்து செல்லும்போது. 

தொடர்ந்து, "உங்களைப் பாத்தா நல்லவராத் தோணுது. உங்களை மாதிரி வாலிபர்கள் நண்பர்கள் இல்லாம தனியா சினிமாவுக்கு வரதே அதிசயம்தான்!" என்றாள் அவள். 

"கூப்பிட்டேன். யாரும் வரமாட்டேன்னுட்டாங்க. ஜெமினி படம் பாக்கறதில அவங்களுக்கு அதிக ஆர்வம் இல்ல. சிவாஜி எம் ஜிஆர் படம்னாதான் அடிச்சு புடிச்சுக்கிட்டு ஓடுவாங்க."

"நீங்க மட்டும்தான் காதல் மன்னன் ரசிகராக்கும்?" என்றாள் அவள் குறும்பாகச் சிரித்தபடி.

"ஆமாம்... நீங்க என்ன சாவித்திரிக்காக வந்தீங்களா?" என்றான் பழனி.

"இல்லை. நானும் காதல் மன்னன் ரசிகைதான்!" என்றாள் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி.

அவள் கூறியதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்குமா என்று அவன் யோசித்தான்.

பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

பஸ் வந்து விடப் போகிறதே என்ற அவசரத்தில், "உங்க பேரு? நீங்க காலேஜ் ஸ்டூடன்ட்தானே?" என்றான் பழனி பரபரப்புடன்.

"பேரு நர்மதா. காமாட்சி காலேஜ் பி எஸ் சி பாட்டனி" என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே பஸ் வந்து விட்டது.

"தாங்க்ஸ்.அப்புறம் பாக்கலாம்" என்ற பவித்ரா அவன் எதிர்பாராமல் அவன் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு பஸ்ஸில் ஏறி விட்டாள்.

'எங்கே, எப்படிச் சந்திப்பது? என் பெயரைக் கூட அவள் கேட்டுக் கொள்ளவில்லையே!' என்று குழம்பியபடி நின்றான் பழனி.

"உன்னை மாதிரி மடையன் இருக்க முடியாதுடா! முதலிலேயே அவளைப் பத்தின விவரங்களைக் கேட்டுக்கிட்டு உன்னைப் பத்தின விவரங்களைச் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு காதல் மன்னனைப் பத்திப் பேசிட்டுக் காதலைக் கோட்டை விட்டுட்ட!" என்றான் பழனியின் நண்பன்  கோவிந்த்.

"அப்பதான் அவளை முதல்ல பாக்கறேன். அவளை பஸ் ஸ்டாண்டில விட்டப்பறம் நான் யாரோ அவ யாரோன்னு போயிடுவேன்னுதான் நினைச்சேன். அவ எங்கிட்ட பேசினதை வச்சுத்தான் அவளுக்கு என் மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்னு தோணிச்சு. அதுக்கப்பறம்தான் அவ மேல எனக்கு ஈடுபாடு வந்தது. அவகிட்ட மேல பேசறதுக்குள்ள பஸ் வந்து, எல்லாம் ரொம்ப வேகமா நடந்து முடிஞ்சு போச்சு."

"அவளுக்கு உன்கிட்ட ஈடுபாடு இருந்தா அவ அந்த பஸ்ஸை விட்டுட்டு உங்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு அடுத்த பஸ்ல போயிருக்கலாமே!"

"டேய்! தியேட்டர்லேந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடக்க அஞ்சு நிமிஷம் கூட ஆயிருக்காது. அதுக்குள்ள எல்லாத்தையும் யோசிச்சு செயல்படமுடியுமா?" என்றான் பழனி எரிச்சலுடன்.

"ஆனா ஆதுக்குள்ள காதல் மட்டும் வந்துடுச்சாக்கும்!"

"ஆமாண்டா. இந்த ஒரு மாசமா அவளை மறுபடி பாக்க முடியலியேன்னு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்!"

"சரி. அவ காலேஜுக்குப் போய்ப் பாத்தியா?"

"பாத்தேன். ஒரு வாரம் காலேஜ் விடற நேரத்தில காலேஜ் கேட் கிட்ட நின்னேன். அவ வரலை. யார்கிட்டயாவது விசாரிக்கலாம்னா, அவளைப் பத்தித் தப்பா நினைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு. அவளுக்கே அது பிடிக்காம போகலாம். இது என்ன சங்க காலமா, காதலை தைரியமா சொல்ல? 1962ஆம் வருஷம்!"

"எந்த காலேஜ்ல படிக்கிறா அவ?"

"காமாட்சி காலேஜ்."

"டேய்! உனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு அந்த காலேஜ்லதான் படிக்கிறா. ஆனா அவ பி எஸ் சி கெமிஸ்ட்ரி முடிக்கப் போறா. அவகிட்ட நான் ஒரு தடவை தனியா பேசணும்னு சொன்னதால. நாளைக்கு என்னை அவ வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. நர்மதாங்கற பி.எஸ்.சி. பாட்டனி படிக்கிற பொண்ணைப் பத்தி விசாரிச்சு சொல்லுன்னு அவகிட்ட கேக்கறேன்!"

"நான் நர்மதாவுக்கு ஒரு கடிதம் தரேன். அதை அவகிட்ட கொடுத்துடச் சொல்றியா?" என்றான் பழனி.

"அவளுக்கு உன் ஆளைத் தெரியுமோ என்னவோ? அதோட கடிதம்லாம் கொடுத்தா ஏதாவது தப்பா ஆயிடப் போகுது" என்றான் கோவிந்த்.

"ஒரே காலேஜ்தானே? பி எஸ் சி பாட்டனி. எந்த வருஷம்னு தெரியல. ஆனா சுலபமா கண்டு பிடிச்சுடலாம்னு நினைக்கிறேன். கடிதம் ரொம்ப சுருக்கமாத்தான் இருக்கும். நீயே பாரேன்" என்ற பழனி ஒரு தாளை எடுத்து இரண்டு வரிகள் எழுதி அவனிடம் கொடுத்தான்.

"நர்மதா! அன்று உன்னே பஸ் ஏற்றி அனுப்பிய பின் உன்னை மீண்டும் சந்திக்க முடியவில்லை. வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு அதே பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறேன் - காத்திருந்த கண்கள்."

"என்னடா உன் பெயரைப் போடாம காத்திருந்த கண்கள்னு போட்டிருக்க?"

"அதுதான் நாங்க பாத்த படம். அவ புரிஞ்சுப்பா!" என்றான் பழனி.

ஞாயிற்றுக்கிழமை மாலை அதே பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.  

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 114
நாணத்துறவுரைத்தல்

குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந் தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...