அன்பரே!
உங்கள் ஆருயிர்க் காதலியின் வணக்கங்கள்.
என் நாணத்தைச் சற்று ஒதுக்கி விட்டு, இந்த ஓலையைத் தங்களுக்கு எழுதுகிறேன்.
அதுவும் என் உயிர்த் தோழி மேகலை தஞ்சை நகருக்குச் செல்வதால், அவள் மூலம் இந்த ஓலையை அனுப்பக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி, இந்த மடலை வரைந்து அனுப்புகிறேன்.
அவள் உறவினர் தஞ்சையில் ஒரு வியாபாரி என்பதால், வியாபார வேலையாக அங்கே சென்றிருக்கும் உங்கள் இருப்பிடத்தை, அவர் மூலம் கண்டறிந்து, இந்த ஓலையைத் தங்களிடம் சேர்த்து விடுவதாக, அவள் எனக்கு உறுதி அளித்திருக்கிறாள்.
என் காதலுக்கு உதவுவதில் அவளுக்கு எவ்வளவு ஆர்வம் பாருங்கள்!
அழகும் அறிவும் நிரம்பப் பெற்ற ஆண்தகையே! இந்த ஏழையின் மீது நீங்கள் ஏன் அன்பு காட்டினீர்கள்?
அன்பு காட்டியதோடு நில்லாமல், பலமுறை என்னைத் தனிமையில் சந்தித்துக் காதல் மொழிகள் பேசி, என்னைக் கட்டியணைத்து... (இதற்கு மேல் சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது!)
இதை எழுதும்போது கூட, நீங்கள் என்னைத் தழுவிய இன்பத்தை எண்ணி, என் மனம் களிப்பையும், வேதனையையும் ஒருங்கே அனுபவிக்கிறது.
காதல் இன்பத்தில் என்னைத் துய்க்க வைத்த பின், திடீரென்று ஒருநாள் வியாபார வேலையாகத் தஞ்சைப் பட்டணத்துக்குச் செல்வதாகச் சொல்லி, என்னைத் துன்பக் கடலில் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டீர்கள்.
நீந்தவும் முடியாமல், மூழ்கவும் மனம் வராமல், இந்தத் துன்பக் கடலில் அல்லாடியபடி நான் படும் தவிப்பை உங்களுக்கு உணர்த்தவே இந்த மடல்.
இந்த மடல் கண்டதும், விரைந்து வந்து, இந்த மங்கையைக் கைதூக்கிக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் அன்பு என்னும் மழைநீருக்காக, நான் சாதகப் பறவை போல் தாகத்துடனும், தவிப்புடனும் காத்திருக்கிறேன்.
உங்கள் ஆருயிர்க் காதலி
அபலை மதிவதனி.
ஆண்டு: 1921
அன்புள்ளவரே!
உங்கள் திருவடியில் ஆயிரம் முறை விழுந்து வணங்கி, உங்கள் அன்புக் காதலி பார்வதி எழுதிக் கொள்வது.
நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது தவறு என்று நினைத்தால், என்னை மன்னித்து விடுங்கள்.
இது உங்கள் கைகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக, இதை ரிஜஸ்டர்ட் தபாலில் அனுப்புகிறேன். ரிஜஸ்டர்ட் போஸ்ட் கட்டணத்துக்காக, முகப்பவுடர் வாங்க வேண்டும் என்று அம்மாவிடம் பொய் சொல்லிக் காசு வாங்கி இருக்கிறேன். அம்மா கேட்டால், பழைய பவுடர் டப்பாவைக் காட்டிப் புதுசு என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்!
தறசெயலாகக் கோவிலில் சந்தித்த என்னைப் பின் தொடர்ந்து வந்து, உங்கள் காதலைச் சொல்லி, என் மனதை மயக்கினீர்கள்.
அதன் பிறகு, நாம் சில தனிமையான இடங்களில் சந்தித்துப்பேசி நெருக்கமானோம்.
உங்கள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று திடீரென்று ஊருக்குப் போனீர்கள். ஒரு மாதமாகி விட்டது. உங்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. உங்கள் தந்தை நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
எனக்கு நீங்கள் கடிதம் எழுதினால், என் பெற்றோர் பார்த்து விடுவார்கள் என்பதால்தான் நீங்கள் எழுதவில்லை என்று எனக்குப் புரிகிறது.
ஆனால், உங்கள் பிரிவைத் தாங்க முடியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் விரைவிலேயே இங்கே திரும்பி வருவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் என் முகத்தை அன்புடன் பார்த்து, என் கையை ஆதுரத்துடன் பற்றினால்தான் என் ஏக்கம் தீரும்.
கீழே உள்ள என் தோழியின் விலாசத்துக்கு எனக்கு எழுதவும். அவள் பெற்றோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவள் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்வாள்.
உடன் பதில்.
உங்கள் அன்பள்ள
பார்வதி.
ஆண்டு: 2021
ஷைலு தன் அலைபேசியிலிருந்து விஸ்வாஸின் அலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி.
டேய்!
நீ பாட்டுக்கு வருவே, என்னைக் காதலிக்கறேம்பே, சினிமா, மால்னு ரெண்டு மாசம் சுத்திட்டு, ஆஃபீஸ் வேலையா மும்பைக்குப் போறேன், நாலு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டு, திடீர்னு காணாமப் போவ.
ஆஃபீஸ் வேலையா ரொம்ப பிஸியா இருப்பேன்னுட்டு நான் உனக்கு ஃபோன் கூடப் பண்ணாம இருந்தா, நீ பாட்டுக்கு கமுக்கமா இருக்க!
உனக்கு ஃபீலிங்ஸ் இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு இருக்கு. அதனாலதான் பிரஸ்டீஜ் பாக்காம, உனக்கு மெஸ்ஸேஜ் பண்றேன்.
இன்னிக்கு ஈவினிங் நீ எனக்கு வீடியோ கால் பண்ணலே, அப்புறம் இருக்குடா உனக்கு!
யுவர் லவ்
ஷைலு.
பொருள்:
காமத்தால் துன்புற்று வருந்துபவர்க்கு மடலூர்தல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றும் இல்லை.
No comments:
Post a Comment