"என்னப்பா?" என்று மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே. உள்ளிருந்து வெளியே வந்தான் மாணிக்கம்.
"ஏண்டா, உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. நீ பாட்டுக்கு உள்ளே உக்காந்துக்கிட்டிருக்கியே!" என்றார் துரைசாமி.
மாணிக்கம் பெரியப்பாவையும், பெரியம்மாவையும் பார்த்துக் கைகூப்பி வணங்கி, "வாங்க, எப்படி இருக்கீங்க?" என்றான்.
"என்னடா, ஆம்பளையா இருந்துக்கிட்டு, பொம்பளை மாதிரி இப்படி வெக்கப்படறே? நீ பேசறதே கிணத்துக்குள்ளேந்து பேசற மாதிரி அவ்வளவு மெதுவாக் கேக்குது!" என்றார் பெரியப்பா, சிரித்தபடி.
"அவன் எப்பவுமே அப்படித்தாங்க. அவனுக்கு ரொம்பக் கூச்ச சுபாவம். எங்க ரெண்டு பேரைத் தவிர வேற யார்கிட்டேயும் பேசறத்துக்கே கூச்சப்படுவான். மத்தவங்க முன்னால வரத்துக்குக் கூடத் தயங்குவான்!" என்றாள் அவன் அம்மா மீனாட்சி, மகனுக்குப் பரிந்து.
"பெரிய கம்பெனியில மெஷின் ஆபரேட்டரா வேலை செய்யற! கல்யாணம் பண்ண வேண்டிய வயசில, இப்படிக் கூச்சப்படலாமா?" என்றார் பெரியப்பா.
"பொண்டாட்டி வந்தா, கூச்சமெல்லாம் பறந்துடாதா?" என்ற பெரியம்மா, "என்ன, கல்யாணத்துக்குப் பாத்துக்கிட்டிருக்கீங்க இல்ல?" என்றாள், மீனாட்சியைப் பார்த்து.
"எங்கே? எப்ப கேட்டாலும், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்னு சொல்லிக்கிட்டிருக்கான்!" என்றாள் மீனாட்சி.
"அன்புள்ள மான்விழியே!
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயர் காதலில் ஓர் கவிதை"
கடிதத்தின் துவக்க வரிகளைப் படித்து விட்டுப் பெரிதாகச் சிரித்த கண்ணம்மா, "என்னையா, சினிமாப் பாட்டை அப்படியே எழுதி இருக்கே! உனக்கா சுயமா எழுதத் தெரியாதா?" என்றாள்.
"அது ஆரம்பம்தான். ஆரம்பம் அழகா இருக்கட்டும்னுட்டுத்தான் சினிமாப் பாட்டு வரிகளை எழுதினேன். அப்புறம் நான் எவ்வளவு எழுதி இருக்கேன்! அதையெல்லாம் படிக்க மாட்டியா?" என்றான் மாணிக்கம்.
"வீட்டிலேயே படிச்சுட்டேன் - அதுவும் பத்துத் தடவை! சும்மா உனக்கு எதிரே கொஞ்சம் படிச்சுக் காட்டினேன்" என்று சிரித்தாள் கண்ணம்மா.
"படிச்சுட்டியா?" என்று கூச்சத்தில் நெளிந்த மாணிக்கம், "எப்படி இருக்கு?" என்றான்.
"பத்துத் தடவை படிச்சேன்னு சொன்னேனே, அதிலேந்தே தெரியலியா?" என்றபடியே, மாணிக்கத்தின் கைகளை அன்புடன் பற்றிய கண்ணம்மா, "ஆமாம், நாமதான் நேரில பாத்துப் பேசிக்கிறமே, அப்புறம் எதுக்கு இந்தக் கடிதம்?" என்றாள்.
"கடிதத்தில எழுதினதையெல்லாம், நேரில சொல்ல முடியுமா?"
"ஆமாம், ஆமாம்" என்றபடியே கடிதத்தை மீண்டும் பிரித்த கண்ணம்மா, "அது என்ன எழுதி இருக்க...ரோஜா இதழ் போன்ற உன் இதழ்களில்..." என்று கடிதத்தின் ஒரு பகுதியை உரக்கப் படிக்க ஆரம்பத்தாள்
"உஸ்! உரக்கப் படிக்காதே! எனக்கு வெக்கமா இருக்கு!" என்று அவள் இதழ்களைத் தன் விரல்களால் மூடினான் மாணிக்கம்.
பொருள்:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.
No comments:
Post a Comment