Thursday, April 27, 2023

1180. பறையொலி கேட்டபோது...

"இதுக்குத்தான் நான் அந்தத் திருமண விழாவுக்கு வர மாட்டேன்னு சொன்னேன்!" என்றாள் முத்தழகி.

"அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்தது உனக்கு மாறுதலா இருந்திருக்குமே! உன்னோட துயரம் கொஞ்சம் குறைஞ்சிருக்குமே!" என்றாள் அவள் தாய் மரகதம்.

"நான் ஒரு ஓரமாத் தனியா உக்காந்திருந்தேன். அங்கே இருந்த இளம்பெண்கள் எல்லாம், "நீ ஏன் தனியா உக்காந்திருக்கே?"ன்னு சொல்லி என்னை அவங்களோட அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. பத்துப் பதினைஞ்சு பேரா சேர்ந்துக்கிட்டு என்ன ஒரு பேச்சு, ஆட்டம், பாட்டம்!"

"உனக்குக் கொஞ்சம் மாறுதலா இருந்திருக்குமே!"

"எப்படிம்மா? அவங்கள்ளாம் அவங்க காதலர்களைப் பத்திப் பேசினாங்க. காதலனை சந்திச்சது எப்படி, காதலன் தன்னை எப்படிக் கொஞ்சுவான், காதலனோட சண்டை போட்டது, அப்புறம் சமாதானமாகி சேந்துக்கிட்டதுன்னு ஒவ்வொருத்தியும் பேசின காதல் கதைகளை வச்சு ஒரு புராணமே எழுதலாம்."

"நீ பேசாம கேட்டுக்கிட்டிருந்தியா?"

"ஆமாம். அவங்க பேசறதையெல்லாம் கேட்டப்ப, 'எனக்கும் இப்படிப்பட்ட அனுபவமெல்லாம் இருந்ததே, ஆனா என் காதலன் என்னை விட்டுட்டுப் போயிட்டானே!' ன்னு நினைச்சு மனசு ரொம்ப சங்கடப்பட்டுச்சு. கஷ்டப்பட்டு அழுகையை அடக்கிக்கிட்டிருந்தேன். ஆனா அவங்க என்னன்னா, 'நீ ஏண்டி சும்மா இருக்கே? உன்னோட அனுபவத்தைச் சொல்லு' ன்னு என்னைத் தூண்டிக்கிட்டே இருந்தாங்க!"

மரகதம் மகளுக்கு ஆதரவாக ஏதோசொல்ல வாயெடுத்தபோது தெருவில் பறையடிக்கும் சத்தம் கேட்டது.

"பறையடிக்கறாங்களே! ஏதாவது முக்கியமான அறிவிப்பா இருக்கப் போகுது. வா, வாசலுக்குப் போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்!" என்று மகளின் கையைப் பற்றி வாசலுக்கு அழைத்துச் செல்ல யத்தனித்தாள் மரகதம், மகளின் கவனத்தைத் திருப்பி அவள் துயர நினைவுகளைச் சற்றே பின்தள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து.

முத்தழகி சட்டென்று தன் தாயின் கைகளைப் பற்றி அவளை அருகில் இழுத்தாள்.

"ஏம்மா, தெருக்கோடியில பறையடிச்சது வீட்டுக்குள்ள இருக்கறப்பவே உனக்குக் கேட்டுதில்ல?" என்றாள் முத்தழகி.

"ஆமாம், கேட்டது. அதனாலதானே உன்னையும் அழைச்சுக்கிட்டு வாசலுக்குப் போறேன்?" என்றாள் மரகதம்.

"என் கண்ணைப் பாரும்மா! எங்கேயோ அடிக்கற பறையோட சத்தம் வீட்டுக்குள்ள இருக்கற நமக்குக் கேக்கற மாதிரி, என் மனசுக்குள இருக்கற துயரம் என் கண்ல தெரியல? ஆனா ஏம்மா சில பேர் இதை கவனிக்காம என் துயரத்தை அதிகமாக்கற மாதிரி நடந்துக்கறாங்க!" என்றாள் முத்தழகி விம்மலுடன்.

மரகதம் தன் மகளை ஆறுதலுடன் இறுக அணைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

பொருள்:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...