Saturday, April 22, 2023

1179. விழியே, விழியே!

தோழியின் வீட்டுக்கு மூச்சிரைக்க ஓடி வந்த சத்தியவதி படபடவென்று கதவைத் தட்டினாள்.

பரிவாதினி கதவைத் திறந்ததும் அவளை அணைத்துக் கொண்ட சத்தியவதி, "அவரு நாளைக்கு வராருடி!" என்றாள்.

"அதுக்குத்தான் இப்படி மூச்சிரைக்க ஓடி வந்து படபடன்னு கதவைத் தட்டினியா?  நாளைக்கு வரப் போறார்னு எப்படிச் சொல்ற? சோதிடர் யாராவது சொன்னாரா, இல்லே விடியற்காலையில அப்படிக் கனவு கண்டியா? ஆனா நீதான் தூங்கறதே இல்லையே, அப்புறம் எங்கே கனவு காண்றது?" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கிட்ட சொல்லலாம்னு ஓடி வரேன். இப்படிக் கேலி செய்யறியே!" என்றாள் சத்தியவதி சற்றே கோபத்துடன்.

"மன்னிச்சுக்கடி. உன் வீட்டுக்காரர் போனதிலேந்தே உன் முகத்தில மலர்ச்சியைப் பாக்கவே முடியல. பல மாதங்களுக்கப்பறம் இப்பதான் உன் முகத்தில மலர்ச்சி தெரியுது. அந்த உற்சாகத்திலதான் கொஞ்சம் கேலி செஞ்சேன். ஆமாம், எப்படி உனக்கு இந்தச் செய்தி கிடைச்சதுன்னு சொல்லலியே!"

"அவர் வேலை செய்யற கப்பல் துறைமுகத்துக்கு வந்துடுச்சம். அதில அவரோட வந்த ஒத்தர்  தன் வீட்டுக்கு வந்துட்டார். என் வீட்டுக்காரருக்கு கப்பல்ல வந்த சரக்குகளை ஒப்படைக்கிற வேலை இருக்கறதால அதை முடிச்சுட்டு நாளைக்கு வரதா அவர் மூலமா செய்தி சொல்லி அனுப்பி இருக்காரு!" என்றாள் சத்தியவதி மகிழ்ச்சியுடன்.

"அப்பா! எனக்கே எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? உன் வீட்டுக்காரர் ஊருக்குப் போனதிலேந்து அவரு எப்ப திரும்ப வருவாருன்னு பார்த்துக்கிட்டு நீ தூங்காம இருக்கறதையும், அதனால உன் கண்கள் எப்பவுமே சோர்ந்திருக்கறதையும் என்னால பாக்க முடியல! இத்தனை நாளா தூங்காததுக்கும் சேர்த்து வச்சு இனிமேயாவது நல்லாத் தூங்கு!" என்றாள் பரிவாதினி.

"ஏண்டி, உன் வீட்டுக்காரர் வந்து ஒரு மாசமாச்சு. நீ இப்ப சந்தோஷமாத்தானே இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"ஆமாம். ஏன் கேக்கற?" என்றாள் சத்தியவதி.

"இதுக்கு முன்னால நீ சரியாத் தூங்காததால உன் கண்கள் சோர்வா இருந்துச்சு. இப்பவும் அதே மாதிரி சோர்வாத்தானே இருக்கு அதுதான் கேட்டேன்!"

"என்ன செய்யறது? அவரு மறுபடி எப்ப கிளம்பிப் போயிடுவாரோன்னு நினைச்சு இப்பவும் எனக்குத் தூக்கம் வரதில்ல!" என்றாள் சத்தியவதி."

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

பொருள்:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி்த் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...