Sunday, April 16, 2023

1178. பேசும் பொம்மை!

பொருட்காட்சிக்கு வந்திருந்த தோழிகள் நால்வரும் "பேசும் பொம்மை" என்ற 'அதிசயத்தைப்' பார்த்து விட்டு வெளியே வந்தனர்.

"அந்த ஆளு கேட்ட கேள்விக்கெல்லாம் அந்த பொம்மை பதில் சொல்லிச்சே! ஆச்சரியமா இல்ல?" என்றாள் வனிதா.

"இதில ஆச்சரியம் என்ன இருக்கு?அஞ்சாறு கேள்விகளுக்கு பதிலை ரிகார்ட் பண்ணி வச்சிருக்காங்க. அந்த ஆளு வரிசையா கேள்விகளைக் கேக்கறாரு. பொம்மைக்குப் பின்னால திரை இருக்கு. அவரு ஒரு கேள்வியைக் கேட்டதும், திரைக்குப் பின்னால ஒத்தர் இருந்துக்கிட்டு மறைவா இருக்கற பிளே பட்டனை அழுத்தறாரு. உடனே ரிகார்ட் பண்ணின பதில் பிளே ஆகுது. கேள்வியை மாத்திக் கேக்கச் சொன்னா அவரு ஒத்துக்கல. ரொம்ப எளிமையான தொழில் நுட்பம்! இப்ப கம்ப்யூட்டர்னு ஒண்ணு வந்திருக்கு. அதை வச்சு என்னென்னவோ அற்புதங்களையெல்லாம் உருவாக்கிக்கிட்டிருக்காங்க. இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி ஆச்சரியப்படறியே!" என்றாள் அனு.

"சும்மாவா சொல்றோம் உன்னை, விஞ்ஞானி அனுன்னு!" என்றாள் உமா.

"அப்படின்னா அந்த பொம்மை பேசினது அதோட உதட்டிலேந்துதான் வந்திருக்கு, உள்ளத்திலேந்து வரலை, அப்படித்தானே?'" என்றாள். வனிதா.

"இவளைப் பாரு, கண்ணதாசன் பாட்டுக்கு விளக்க உரை கொடுக்கறா?" என்ற உமா, 

"உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததை உள்ளமே நினைத்ததா?"

என்ற வரிகளைப் பாடினாள்.

"ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சா போதும், உடனே ஒரு பாட்டை எடுத்து விட்டுடுவா!" என்று அனு உமாவைக் கேலி செய்ததை ராதா கவனிக்கவில்லை. அவள் மனம் அந்தப் பாடல் வரிகளிலேயே நிலைத்திருந்தது..

"என்னை உயிருக்குயிராக் காதலிக்கறதா சொன்னானே, அது வெறும் உதட்டளவில்தானா? உள்ளத்திலேந்து அந்த வார்த்தை வந்திருந்தா ரெண்டு மாசமா என்னைப் பாக்காம என்னைத் தொடர்பு கொள்ளாம இருப்பானா? நானும் அவன் எங்கேயாவது கண்ல பட மாட்டானான்னு எல்லா இடங்களிலேயும் தேடிக்கிட்டிருக்கேன். ஒருவேளை அவனும் இந்தப் பொருட்காட்சிக்கு வந்திருக்கானோ என்னவோ! அப்படி வந்திருந்தா என் கண்ல படலாமே!' என்று நினைத்தபடியே கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டாள் ராதா.

"ஏண்டி, நீ ரொம்ப டல்லா இருக்க, உனக்கு ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னுதானே இங்கே வந்திருக்கோம்? நாங்க பேசறதைக் கேட்காம நீ பாட்டுக்கு எங்கேயோ பாத்துக்கிட்டு வந்தேன்னா என்ன அர்த்தம்?" என்று ராதாவைக் கடிந்து கொண்டாள் உமா.

"தன்னோட ஆள் இங்கே எங்கேயாவது இருக்கானோன்னு பாக்கறாளோ என்னவோ!" என்று வனிதா விளையாட்டாகச் சொல்ல, ராதாவின் மனம் புண்பட்டு விடுமோ என்ற பயத்தில் அனு வனிதாவை முறைத்துப் பார்த்தாள்.

ஆனால் ராதா, 'நீ சொல்றது சரிதாண்டி!" என்றபடியே வனிதாவின் தோளை அன்புடன் பற்றினாள்.

"கள்ளமில்லை தோழி
உள்ளதைத்தான் சொன்னாய்!" 

என்று பாடி நிலைமையின் இறுக்கத்தைக் குறைக்க முயன்றாள் உமா! 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

பொருள்:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கிறார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...