Friday, April 14, 2023

1177. தமயந்தி கொடுத்த சாபம்!

அல்லியின் தந்தை இதிகாசங்கள், புராணங்கள் கற்றுத் தேர்ந்தவர். தினமும் தன் வீட்டுக்கு வரும் சிலரிடம் அவர் சில புராணக் கதைகளை விரிவாகக் கூறுவது வழக்கம்.

"என் அப்பா சொல்ற கதையை ஒருநாள் கேட்டுப் பாரு. உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்!" என்று அல்லி தன் தோழி தமயந்தியிடம் கூறியதால், தமயந்தி அல்லியின் வீட்டுக்கு வந்தாள். 

தன் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டு தன் கம்பீரமான குரலில் அல்லியின் தந்தை கதை கூற அவரைச் சுற்றிலும் கூடத்திலும், தாழ்வாரத்திலும், முற்றத்திலும் அமர்ந்திருந்த இருபது நபர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அல்லியும் தமயந்தியும் ஒரு ஓரமாக அமர்ந்து கேட்டனர்.

"என்னடி கதை நல்லா இருந்ததா?" என்றாள் அல்லி.

தமயந்தி ஏதோ யோசனையுடன் மௌனமாகத் தலையாட்டினாள்.

"இன்னிக்கு துஷ்யந்தன்-சகுந்தலை கதை சொல்லுவார்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா உன்னை இன்னிக்கு வரச் சொல்லாம இன்னொரு நாள் வரச் சொல்லி இருப்பேன்!" என்றாள் தமயந்தி.

'இன்று பார்த்தா சகுந்தலையைக் காதலித்து மணந்த பின் முனிவர் சாபத்தால் அவளை மறந்து விட்ட துஷ்யந்தன் கதையை அப்பா சொல்ல வேண்டும்! காதலன் கைவிட்டு விட்டதால் மனம் நொந்து போயிருக்கும் தோழிக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்துச் செய்த செயல் அவள் துயரத்தை இன்னும் அதிகமாக்கி இருக்குமோ?' என்று நினைத்தாள் அல்லி. 

"என்னடி பதிலே சொல்லமாட்டேங்கற?" 

"தன் அப்பாவோட ஆசிரமத்துக்கு வந்த துர்வாசருக்கு சகுந்தலை கஷ்டப்பட்டு சேவை செஞ்சா. ஆனா அவ ஏதோ குறை வச்சுட்டாங்கறதுக்காக அவள் கணவன் அவளை மறந்துடுவான்னு முனிவர் சாபம் கொடுத்துட்டாரு. நான் உண்மையா ஒத்தரைக் காதலிச்சேன். அவர் என்னைக் கைவிட்டுட்டுப் போயிட்டாரு. இது யார் கொடுத்த சாபமோ தெரியல!" என்றாள் தமயந்தி.

"சாபமாவது மண்ணாவது! உன்னை மாதிரி ஒரு பெண் மனைவியாகக் கிடைக்க அவனுக்குக் கொடுத்து வைக்கல. விட்டுத் தள்ளு!" என்றாள் அல்லி.

 "துர்வாசர் சகுந்தலைக்கு சாபம் கொடுத்த மாதிரி நானும் ஒரு சாபம் கொடுக்கப் போறேன்!" என்றாள் தமயந்தி திடீரென்று.

"யாருக்கு? உன்னைக் கைவிட்ட காதலனுக்கா?"

"இல்லை. மகிழ்ச்சியா இருந்த என்னைக் காதல் நீரோட்டத்தில தள்ளி, இப்ப அந்த நீரோட்டம் என்னை அடிச்சிக்கிட்டுப் போய்த் துயரக் கடல்ல தள்ளினதுக்குக் காரணமா அமைஞ்ச என் கண்களுக்குத்தான்! ஏற்கெனவே தான் செஞ்ச பாவத்துக்கு தண்டனையா என் கண்கள் அழுதுக்கிட்டும்,  தூக்கமில்லாம தவிச்சுக்கிட்டும் இருக்கு. ஆனா இந்த தண்டனை போதாது. ஏ கண்களே! அழுது அழுது உங்கள் கண்ணீர் வற்றிப் போகட்டும். பிடி சாபம்!" என்றுபடியே கையை வீசிப் பெரிதாகச் சிரித்தாள் தமயந்தி.

அல்லி மௌனமாக தமயந்தியின் தோள்களை ஆதரவுடன் பற்றினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்"விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

பொருள்:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...