ஆன்மீகப் பேச்சாளரின் சொற்பொழிவைத் தன் தாயுடன் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சுகன்யா, "நான் கிளம்பறேம்மா!" என்று சொல்லி விட்டு எழுந்தாள்.
"ஏண்டி, ஒரு மாறுதலுக்காகத்தானே உபன்யாசத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்? பாதியில எழுந்து போற!" என்ற அவள் அம்மா, மகளின் கண்களைப் பார்த்து விட்டு, "கண்ணெல்லாம் எப்படிச் சிவந்திருக்கு! தூங்கினாத்தானே? சரி. வீட்டில போய்ப் படுத்துத் தூங்கு" என்றாள், பரிவுடன்.
உபன்யாசம் நடந்து கொண்டிருந்த மண்டபத்திலிருந்து வீட்டுக்கு நடந்தாள் சுகன்யா. சோர்வடைந்த கண்கள், நடக்கும்போதே சொக்கின. ஆனால், வீட்டுக்குப் போய்ப் படுக்கையில் சாய்ந்தால், அவை உறங்கப் போவதில்லை!
அவள் காதலித்து மணந்த கார்மேகன், தன் நண்பனுடன் வணிகம் செய்ய வடக்குப் பகுதிக்குச் சென்று பல மாதங்கள் ஆகி விட்டன. அவன் சென்றதிலிருந்து அவள் உறக்கம் போய்விட்டது.
கணவனைப் பிரிந்ததிலிருந்து சுகன்யா சரியாகச் சாப்பிடாததால், அவள் உடல் பலமிழந்து விட்டதாக அவள் அம்மா பலமுறை கூறி இருக்கிறாள்.
உபன்யாசகர் கூறிய கருத்து நினைவுக்கு வந்தது.
'தவறு செய்வது ஒருவர், தண்டனையை அனுபவிப்பது மற்றொருவர்!'
'உண்மைதான். கார்மேகனைப் பார்த்து, அவன் மேல் காதல் கொண்டவை இந்தக் கண்கள்தான். ஆனால், காமநோயால் வாடுவது இந்த உடல்தானே!'
கண்களில் மீண்டும் சோர்வு ஏற்பட்டது.
'இல்லையே! இந்தக் கண்களும்தானே தூங்க முடியாமல், சோர்வடைந்து அல்லல்படுகின்றன!
'ஆயினும், இந்தக் கண்கள் வருந்துவது நியாயம்தான்! தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிப்பது நியாயம்தானே!'
வீட்டை அடைந்ததும், படுக்கையில் படுத்துக் கொண்டு இன்னொரு உறக்கமில்லாத இரவைக் கழிக்கத் தயாரானாள் சுகன்யா.
கற்பியல்
பொருள்:
எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப் பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
No comments:
Post a Comment