Wednesday, April 12, 2023

1175. நீயும் உறங்கவில்லை, நானும் உறங்கவில்லை!

"ஏம்மா, நீ ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை போலிருக்கே!" என்றாள் நந்தினி தன் தாயிடம்.

"ஆமாம். முதுகுவலி. மல்லாக்கப் படுத்தா உடம்பு வலிக்குது. ஒருக்களிச்சுப் படுத்தா கொஞ்ச நேரத்தில முழிப்பு வந்துடுது. இன்னொரு பக்கம் திரும்பிப் படுக்க வேண்டி இருக்கு. அதனால அடிக்கடி முழிச்சுக்கிட்டு, மாத்தி மாத்தித் திரும்பிப் படுத்துக்கிட்டிருந்தேன். அது சரி. நான் சரியாத் தூங்காதது உனக்கு எப்படித் தெரியும்? நீயும் சரியாத் தூங்கலியா என்ன?" என்றாள் நந்தினியின் தாய்

'சரியா இல்ல, சுத்தமாவே தூங்கல!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட நந்தினி, "தூங்கினேம்மா! ஒண்ணு ரெண்டு தடவை முழிப்பு வந்தப்ப நீ புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பார்த்தேன்" என்றாள் தாயிடம்.

தன்னைக் காதலித்த சதீஷ் காதலுக்கு விடைகொடுத்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டதிலிருந்து தனக்கு உறக்கம் போய் விட்ட உண்மையைத் தாயிடம் சொல்ல நந்தினிக்குத் துணிவு வரவில்லை.

"கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை 
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி!"

கைபேசியில் ஒலித்த பாடல் நந்தினியின் மனதைப் பிழிந்தது. 

'கவிஞர் எழுதியதில் ஒரு பிழை இருக்கிறது. கையளவு உள்ளத்தில் கடலளவு ஆசை ஏற்படக் காரணம் இந்தக் கண்கள்தானே! ஏன் கண்களின் பிழையைக் கவிஞர் சுட்டிக் காட்டவில்லை?' என்று நினைத்துப் பார்த்தாள் நந்தினி.

மனதை அழுத்திக் கொண்டிருக்கும் துயரத்தைத் திசை திருப்ப இது போன்ற சிந்தனைகளை மனதில் வலுவில உருவாக்கிக் கொள்ளும் பழக்கத்தை அவள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

தூக்கம் காணாத கண்கள் சோர்வை வெளிப்படுத்த, ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டிருந்தாள் நந்தினி..

பாடல் முடிந்து அடுத்த பாடல் ஒலித்தது.

"கண்களே! கண்களே!
காதல் செய்வதை விட்டு விடுங்கள்!'

தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பது போல் அந்தப் பாடல் வந்ததைக் கேட்டு ஒரு நிமிடம் வியந்த நந்தினி காதல் பற்றிய சிந்தனைகளிலிருந்து தன் மனதைத் திருப்ப எண்ணிப் பாட்டை நிறுத்தினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 118
கண்விதுப்பழிதல் (கண்கள் துயரில் துடித்தல்)

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

பொருள்:
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...