Sunday, May 7, 2023

1184. நினைவாலே சிலை செய்து...

கோதையின் கணவன் அவளை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.

நீண்டஇடைவெளிக்குப் பிறகு கோதையைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வந்த அவள் பழைய தோழி நாயகி, சற்று நேரம் அவளிடம் பேசிய பிறகு, "ஆமாம், உன் புருஷனை எங்கே காணோம்? வேலைக்குப் போயிருக்காரா?" என்றாள்.

"ஆமாம். வேலைக்குத்தான் போயிருக்காரு. ஆனா, வெளியூருக்கு!" என்றாள் கோதை, சிரித்தபடி.

"என்னடி இது? புருஷன் உன்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூருக்குப் போயிருக்காருன்னு சிரிச்சுக்கிட்டே சொல்ற! கணவனைப் பிரிஞ்சிருக்கறது வருத்தமா இல்லையா?" என்றாள் நாயகி, வியப்புடன்.

"பிரிஞ்சிருக்கறது வருத்தமாத்தான் இருக்கு. ஒரு நாளைக்கு அறுபது நாழிகையும் அவர் நினைப்பாகவேதான் இருக்கேன். மனசுக்குள்ள அவர் உருவத்தை சிலை மாதிரி உருவாக்கி வச்சிருக்கேன். எப்பவும் அவரைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருக்கேன். ஏன், பல சமயம் அவரோட நேர்ல பேசற மாதிரியே, மனசளவில பேசிக்கிட்டுக் கூட இருக்கேன். அதனால மகிழ்ச்சியாகவும் இருக்கேன்!" என்றாள்.

அப்போது உள்ளிருந்து வந்த கோதையின் தாய், "இவ இப்படி சொல்றா. ஆனா இவ உடம்பு இளைச்சு தோலெல்லாம் வெளுத்து, பசலை படர்ந்திருக்கு. நீயே பாரு!" என்றபடி, கோதையின் தோல் வெளுத்திருந்த கையைப் பிடித்து, நாயகியிடம் காட்டினாள்.

"அவர் இங்கே இருக்கும்போது, நான் அவரோட இருந்தேன். அவர் வெளியூர் போனப்பறம், அவர் நினைப்பாகவே இருக்கேன். முன்னே இருந்த மாதிரி, இப்பவும் அவரோடதானே இருந்துக்கிட்டிருக்கேன்! அப்புறம் ஏன் பசலை வருது? இது தப்பு இல்லையா?" என்றாள் கோதை, தன் தாயைப் பார்த்து.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

பொருள்:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வதெல்லாம் அவர் குணங்களைத்தான். இருந்தும், இந்தப் பசலை வந்துவிட்டதே! இது வஞ்சகம் அல்லவா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...