கணவன் கிளம்பிச் சென்றதும் தனக்கு ஏற்படப் போகும் பிரிவுத் துயரை ஓரளவுக்காவது குறைக்க, தன் தோழி ரத்னமாலாவை வரச் சொல்லி இருந்தாள் கனகம். அவளும் கனகத்துடன் இரண்டு நாட்கள் தங்கி இருக்க ஒப்புக் கொண்டாள்.
சபாபதி கிளம்ப வேண்டிய நேரத்துக்குச் சிறிது நேரம் முன்பே வந்து விட்டாள் ரத்னமாலா.
கனகத்திடம் விடைபெற்றுக் கொண்டு சபாபதி கிளம்பினான். விடைபெறும்போது, சபாபதி கனகத்திடம் நெருக்கமாக இருந்து அவளைத் தழுவி அணைத்து விடைபெறக் கூடும் என்பதால், சபாபதி கிளம்பும் நேரத்தில் ரத்னமாலா வாசலுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.
சபாபதிக்கு விடைகொடுத்து விட்டுக் கனகம் வீட்டுக்குள் வந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.
கனகத்தின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட ரத்னமாலா, அவள் கையை உற்றுப் பார்த்து விட்டு, "ஏண்டி, உன் கணவர் தெருக்கோடி வரை போயிருப்பாரா?" என்றாள்.
"போயிருப்பாரு. ஏன் கேக்கற?" என்றாள் கனகம், புரியாமல்.
"இல்லை. இப்பதான் உன் கணவர் கிளம்பினாரு. தெருக்கோடிக்குக் கூடப போயிருக்க மாட்டாரு. அதுக்குள்ள உன் தோல் வெளிற ஆரம்பிச்சுட்டுதே, பசலை வந்த மாதிரி! உடம்பு கூடக் கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு!" என்றாள் ரத்னமாலா.
தோழி தன்னைக் கேலி செய்கிறாளா, அல்லது உண்மையாகவே தனக்குப் பசலை வந்து விட்டதா என்று புரியாமல் ரத்னமாலாவின் கண்களைப் பார்த்தாள் கனகம்.
கற்பியல்
பொருள்:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
No comments:
Post a Comment