"எதுக்குடா?" என்று கேட்டபடியே, ஸ்கூட்டரை நிறுத்தினான் முத்து.
"இரு நிமிஷம் இரு!" என்ற காமேஷ், அந்தப் பெரிய வீட்டின் வெளிப்புறச் சுவர் அருகே சென்று, குதிகாலை உயர்த்தி, சுவற்றுக்குப் பின்னே தெரிந்த வீட்டின் முன்புறத் தோட்டத்தை எட்டிப் பார்த்தான்.
"என்னடா பாக்கற? யாராவது பாத்தா, தப்பா நினைக்கப் போறாங்க!" என்று முத்து பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வீட்டின் கேட் அருகே அமர்ந்திருந்த வாட்ச்மேன் ஓடி வந்து, "யாருப்பா அது? எதுக்கு அங்கே எட்டிப் பாக்கற?" என்றான்.
"ஒண்ணுமில்ல. பூவெல்லாம் அழகா இருந்தது. அதைத்தான் பாத்தேன். உள்ள வந்து பாக்கலாமா?" என்றான்.
"போப்பா இங்கேந்து! ஓனர் பாத்தா என்னைத்தான் திட்டுவாரு" என்றான் வாட்ச்மேன், படபடப்புடன்.
"வாடா! போகலாம். என்ன இது பைத்தியக்காரத்தனம்! நீ என்ன பூக்களையே பாத்ததில்லையா என்ன?" என்றான் முத்து, கடிந்து கொள்ளும் குரலில்.
"மீனா! இனிமே ஊருக்கெல்லாம் எங்கேயும் போயிடாதே! நீ ஊர்ல இல்லேன்னா, உன் காதலனைச் சமாளிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு!" என்றான் முத்து, காமேஷைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்து சிரித்தபடி.
காமேஷ் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.
"ஏன், என்ன பண்ணினான் உன் நண்பன்?" என்றாள் மீனா, சிரித்தபடி.
"அதுக்கு முன்னால, உன்னை ஒரு கேள்வி கேக்கணும். உனக்கு ஏன் மீனான்னு பேர் வச்சாங்க? உன் கண் மீன் மாதிரி இருக்குன்னா? எனக்கு ஒண்ணும் அப்படித் தெரியலியே!" என்றான் முத்து.
"என்னைக் கிண்டல் பண்றதை அப்புறம் வச்சுக்கலாம். விஷயத்தைச் சொல்லு. என் காதலனைப் பத்தி ஏதோ புகார் சொல்ல வந்தியே!"
"இலக்கியத்தில, பெண்களோட கண்ணை குவளை மலர் மாதிரின்னு வர்ணிப்பாங்க, படிச்சிருக்கேன். கடவுளை வர்ணிக்கச்சே கூட, சில சமயம் தாமரைப் பூ மாதிரி கண்ணுன்னு சொல்லுவாங்க. அரவிந்தலோசனன், பத்மலோசனி மாதிரி பேர் எல்லாம் இருக்கே! ஆனா, உன் காதலனுக்கு, உன் கண்ணைப் பாத்தா, சின்னப்பூ மாதிரி இருக்காம். அதனால, நீ இல்லாதப்ப, எங்கேயாவது பூச்செடியைப் பாத்தா, உடனே அது கிட்ட போய், அதில இருக்கற பூக்களைப் பாத்துக்கிட்டே நிக்கறான். என்னால சமாளிக்க முடியல!"
மீனா முகமலர்ச்சியுடன் காமேஷைப் பார்த்தாள். சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அவள் மனதில் நிழலாடியது.
"மீனா! நீ பூ பாத்திருக்கியா?" என்றான் காமேஷ்.
"என்ன கேள்வி இது? உன் லெவலுக்கே இது முட்டாள்தனமான கேள்வியாத் தோணல?" என்றாள் மீனா.
"அப்படின்னா, அது எப்படி இருக்கும்னு சொல்லு பாக்கலாம்!"
"பாட்டனியில, பூவோட படம் போட்டு பாகங்களைக் குறிக்கச் சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு உன் கேள்வி!"
"பூவுக்கு நடுவில சின்னாதா மொக்கு மாதிரி இருக்கும். பூவோட இதழ்கள் அதைப் பாதுகாக்கற மாதிரி அதைச் சுத்தி இருக்கும்."
"ரொம்ப மொக்கையா இருக்கு இது!"
மீனாவின் இரு கண்களையும் தன் இரு கை விரல்களால் பிரித்தபடி பிடித்த காமேஷ், "உன் கண்மணியை உன் இமை இதழ் மாதிரி மூடிக்கிட்டிருக்கறதைப் பாத்தா, உன் கண்ணே ஒரு சின்னப்பூ மாதிரிதான் இருக்கு!" என்றான்.
"போடா!" என்று மீனா சிணுங்கினாலும், அவன் அவள் கண்களைப் பிடித்துக் கொண்டு அப்படிச் சொன்னது அவளுக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
"என்ன மீனா! நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம, உன் காதலன் மூஞ்சியையே பாத்துக்கிட்டிருக்க!" என்றான் முத்து.
முத்துவிடம் திரும்பிய மீனா, "முத்து! நீ பூன்னு சொன்னதும், எனக்கு பூஜைங்கற வார்த்தை ஞாபகம் வந்தது. பூஜை வேளையில கரடின்னு ஏதோ சொல்வாங்களே!" என்று சொல்லிச் சிரித்தாள்.
"மன்னிச்சுக்கம்மா, மல்லிகைப் பூவே! உன்னைத் தோட்டக்காரன் தனியா கவனிச்சுக்க விடாம, நான் குறுக்க நிக்கறது தப்புதான். நான் வரேன். டேய், காமேஷ்! பூவை ஜாக்கிரதையாய் பாத்துக்கடா!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் முத்து.
களவியல்
அதிகாரம் 112
நலம்புனைந்துரைத்தல்
குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.
பொருள்
நெஞ்சே! இவள் கண்கள் எல்லோரும் கண்டு மகிழும் மலர்களைப் போல் இருப்பதால், இவள் கண்களை ஒத்த மலர்களைக் கண்டு, நீ அவற்றை இவள் கண்கள் என்று நினைத்து மயங்குகிறாய்!
No comments:
Post a Comment