Thursday, July 16, 2020

1113. கனவில் வந்த உருவம்

"ஆமாம், எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஜி ஆர் ஈ எழுதி, அமெரிக்கா போய்ப் படிக்கணும்? பேசாம, பி.ஈ முடிச்சப்பறம், இங்கேயே ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டு, இந்தியாவிலேயே செட்டில் ஆயிடலாமே!" என்றான் ரவீந்திரன்.

"ஏன் திடீர்னு இப்படிச் சொல்ற? ரெண்டு வருஷமா அமேரிக்கா அமெரிக்கான்னு புலம்பிக்கிட்டிருந்த?" என்றாள் வீணா.

"இந்த ஜி ஆர் ஈ பரீட்சைக்குத் தயார் செய்யறதை நினைச்சாத்தான் இப்படித் தோணுது! புதுசு புதுசா இங்கிலீஷ் வார்த்தை கத்துக்க வேண்டி இருக்கு. 3000 வார்த்தையாவது கத்துக்கணும்கறாங்க. நாம இன்னும் 300 வார்த்தை கூட முழுசாக் கத்துக்கல."

"அதுக்குத்தானே வேர்ட் லிஸ்ட் படிச்சுக்கிட்டிருக்கோம்? ஏ, பி சி டின்னு வரிசையா ஆரம்பிச்சு, இப்ப 'சி'யில இருக்கோம். அதுக்குள்ளே அலுத்துக்கிட்டா எப்படி? தனியாப் படிச்சா கஷ்டமா இருக்கும்னுதானே, நாம ரெண்டு பேரும் சேந்து படிக்கறோம்? அதுவே உனக்குக் கஷ்டமா இருக்கா?"

"சேர்ந்து படிக்கறதில, முதல் பாதி நல்லா இருக்கு! உன்னோட சேர்ந்து இருக்கறதில எனக்கென்ன கஷ்டம்? படிக்கறதிலதான் கஷ்டம்!" என்றான் ரவீந்திரன் சிரித்தபடி, அவள் தோளில் கை வைத்து.

"கையை எடு முதல்ல" என்று சிரித்தபடியே அவன் கையைத் தன்  தோளிலிருந்து அகற்றிய வீணா, "அடுத்த வார்த்தை என்ன பாரு!" என்றாள். 

"Collage-ன்னு போட்டிருக்கு. College-ங்கற வார்த்தை தப்பா பிரிண்ட் ஆகி இருக்குமோ?" என்றான் ரவீந்திரன்.

"உளறாதே! Collage-ன்னா பல பொருட்களால் உருவாக்கப்பட்ட கலை வடிவம்னு அர்த்தம். இதை 'கொலாஷ்'னு உச்சரிக்கணும். நானே 'கொலாஷ்' பெயின்ட்டிங் எல்லாம் பண்ணி இருக்கேனே!"

"ஓ! ஒரு பேப்பர்ல ரெண்டு மூணு கலரைக் கொட்டி, அது மேல ஏதோ கந்தத் துணியெல்லாம் ஒட்ட வச்சு, கலைன்னு சொல்லி, ஏதோ கொலை பண்ணுவியே, அதுவா?"

"வொகாபுலாரியிலதான் பூஜ்யம்னா, கலையை ரசிக்கறதிலியுமா?"

"சாரிம்மா, கலையரசி! கல்யாணத்துக்கப்புறம், கண்டிப்பா உன்னோட கலைக் கொலையை எல்லாம் ரசிப்பேன். இப்ப என்னை முறைக்காதே. அடுத்த வார்த்தைக்குப் போகலாமா? நீயே படிச்சுடு!"

புத்தகத்தைப் பார்த்த வீணா, "Collage-க்கு முன்னால சில வார்த்தைகளை   விட்டுட்டியே!" என்றாள்.

"நாங்கள்ளாம் அப்படித்தான். ஸ்கிப் பண்ணி, ஸ்கிப் பண்ணித்தான் படிப்போம். ஸ்கிப் பண்ணினது ஏதாவது பரீட்சையில் வந்தா, சாய்ஸ்ல விட்டுடுவோம்!"  

"ஜி ஆர் ஈ யில சாய்ஸ்லாம் கிடையாது. அப்புறம் அமெரிக்கா போற ஆசையையே சாய்ஸ்ல விட வேண்டியதுதான்! சரி. கொஞ்சம் சீரியஸாப் படிக்கலாம். நீ விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்கலாம். Chimera. அர்த்தம் தெரியுமா? Camera-ங்கற வார்த்தையை தப்பா பிரிண்ட் பண்ணி இருப்பாங்கன்னு சொல்லாதே!"

"புஸ்தகம் உன்கிட்டத்தானே இருக்கு. நீயே அர்த்தம் பார்த்துச் சொல்லு."

"Chimera-ன்னா பல மிருகங்களோட உடல் உறுப்புகளைச் சேர்த்து உருவான ஒரு கற்பனை மிருகம். இதை 'கிமரா'ன்னு உச்சரிக்கணும்."

"இதுவும் ஒரு மாதிரி 'கொலாஷ்'தான் போலருக்கு."

"'கொலாஷ்'ங்கறது ஒரு அழகான கலை வடிவம். பல மிருகங்களோட உறுப்புகளை சேத்து உருவாக்கின 'கிமரா' பாக்கறதுக்கு நல்லாவா இருக்கும்?பயங்கரமாவோ, அருவருப்பாவோ இருக்காது?"

"ஏன், அழகான உருவமா கூட உருவாக்கலாம்! என்னை மாதிரி நல்ல கலைஞன் படைச்சா, அழகாத்தான் இருக்கும்" என்றான் ரவீந்திரன்.

"சரி. இன்னிக்கு உனக்கு மூடு சரியில்லைன்னு நினைக்கறேன். ஒரு மாதிரியாவே பேசிக்கிட்டிருக்க. இன்னிக்குப் போதும். நாளைக்குத் தொடரலாம்" என்றாள் வீணா, புத்தகத்தை மூடியபடி. 

"நீ புத்தகத்தை மூடினவுடனே, எனக்கு மூடு வந்துடுச்சு - உன்னோட பேசிக்கிட்டிருக்க!"

"முதல்ல இடத்தைக் காலி பண்ணு!" என்றாள் வீணா.

றுநாள். இருவரும் படிப்பதற்காகச் சந்தித்தபோது, "வீணா! சொன்னா நம்ப மாட்ட. நேத்திக்கு நான் கனவிலே 'கிமரா' மாதிரி ஒரு உருவத்தைப் பாத்தேன். ஆனா, அது ஒரு பெண்ணோட உருவம்!" என்றான் ரவீந்திரன். 

"'கிமாரா' மாதிரின்னா, அப்புறம் எப்படி அது ஒரு பெண் உருவமா இருக்கும்?" என்றாள் வீணா.

"பெண்தான். ஆனா, அவ தோள் மூங்கில் மாதிரியிருந்தது. உடம்பு ஒரு பசுமையான கொடி மாதிரி இருந்தது. பல்லெல்லாம் முத்து மாதிரி இருந்தது. கண்ல கருகருன்னு மை தீட்டி, ஈட்டி மாதிரி கூர்மையா இருந்தது. அவ உடம்பிலேந்து ஒரு நறுமணம் வேற வந்தது."

"ஐயோ! கண்றாவியா இருக்கு. 'கிமரா'ங்கரா வார்த்தையைப் படிச்சதால, இப்படி ஒரு உருவம் உன் கனவிலே வந்திருக்கு போலருக்கு."

"இல்ல வீணா! அந்தப் பொண்ணு ரொம்ப அழகு. அதோட. அவளை நான் முன்னாடியே பாத்திருக்கேன்."

"பாத்திருக்கியா? யார் அந்த அழகி? எனக்குத் தெரியுமா அவளை?" எனறாள் வீணா, சற்றுப் பட்டத்துடன். 

"உனக்கு அவளைத் தெரியுமாங்கறது எனக்கு எப்படித் தெரியும்? அவ ஃபோட்டோ என் மொபைல்ல இருக்கு. காட்டறேன். உனக்குத் தெரிஞ்சவாளான்னு பாரு!" என்றபடியே, தன் கைபேசியை எடுத்தான் ரவீந்திரன்.

'மொபைல்ல அவ ஃபோட்டோ வேற வச்சிருக்கியா? இரு இரு. உனக்கு இருக்கு இன்னிக்கு!' என்று மனதில் கறுவிக் கொண்டாள் வீணா.

ரவீந்திரன் அவன் மொபைலில் காட்டிய தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்ததும், வீணாவின் முகத்திலிருந்த கடுகடுப்பு களிப்பாக மாறியது.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

பொருள்:
மூங்கில் போன்ற தோள்களை உடைய இவளுடைய மேனியோ இளம் தளிர், பல்லோ முத்து, உடல் மணமோ நறுமணம், மை உண்ட கண்களோ வேல்!
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...