"இந்த அழகிய நந்தவனத்தில், ஒரு அரசகுமாரனின் கையைப் பற்றியபடி பெருமையாக நடந்து கொண்டிருக்காமல், இந்த ஏழைப் புலவனுடன் நடந்து கொண்டிருக்கிறோமே என்று என்றைக்காவது வருத்தப்பட்டிருக்கிறாயா?"
"அரசகுமாரி அமராவதியே ஏழைப் புலவனான அமராவதியைத்தானே காதலித்தாள்?"
"நன்றாகப் பேசுகிறாய்! இரு..இரு.. அந்தப் பக்கம் போக வேண்டாம்."
"ஏன்? அங்கு பலமுறை போயிருக்கிறோமே! நேற்று கூடப் போனோமே!"
"அங்கே குவளை மலர்கள் இருக்கின்றன."
"இருந்தால்?"
"நேற்று நாம் அங்கே போனபோது, குவளை மலர்கள் கொஞ்சம் தலையைத் தாழ்த்திக் கொண்டு இருந்தது போல் தோன்றியது."
"மலர்கள் எப்படித் தலையைத் தாழ்த்திக் கொள்ளும்? செடிகள் காற்றில் ஆடியதாலோ, மலர்களின் எடையினால் கிளைகள் கீழே சாய்ந்திருந்ததாலோ, அப்படித் தோன்றி இருக்கலாம். சரி, அதற்கும் நாம் அங்கே செல்வதற்கும் என்ன தொடர்பு?"
"சொல்கிறேன். நேற்று, கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதை படித்தேன். அதற்குப் பிறகுதான், எனக்கு ஒரு விஷயம் புரிந்தது."
"என்ன படித்தீர்கள்? என்ன புரிந்தது?'
"கம்பர் மருத நிலத்தின் அழகை வர்ணிக்கிறார். ஒரு அரசவையில் நடன நிகழ்ச்சி நடக்கும் அல்லவா? அது போல், மருத நிலம் அரசரைப் போல் வீற்றிருக்க, அரசவையில் மயில்கள் நடனம் ஆடுகின்றன. தாமரை மலர்கள் விளக்குகளைத் தாங்கி நிற்பது போல் தோற்றமளிக்கின்றன. மேகங்கள் முழவு போல் இசைத்துத் தாளமிடுகின்றன. வண்டுகள் யாழிசை போல் இனிமையாக ரீங்கரிக்கின்றன."
"ஆகா! அருமையான வர்ணனை! புலவரைக் காதலிப்பதால்தானே இப்படிப்பட்ட காவிய ரசங்களைப் பருக முடிகிறது!"
"கம்பர் இன்னொன்றும் சொல்கிறார். இந்த இசை நடனக் காட்சியை வேறு சில பார்வையாளர்களும் பார்க்கிறார்கள் என்கிறார்."
"யார் அந்தப் பார்வையாளர்கள்? "
"குவளை மலர்கள்! 'குவளை கண் விழித்து நோக்க' என்ற வரியைப் படித்ததும்தான், எனக்கு ஒன்று தோன்றியது."
"என்ன தோன்றியது?"
"ஒருவேளை, குவளை மலர்களால் பார்க்க முடிந்தால்?"
"பார்க்க முடிந்தால்?"
"இந்த நந்தவனத்தில் குவளை மலர்கள் இருக்கும் பகுதிக்கு நாம் போனபோது, அவை உன் கண்களைப் பார்த்து விட்டு, 'அடாடா! புலவர்கள் பெண்களின் கண்களை நம்முடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோமே!' என்று நினைத்து, வெட்கித் தலை குனிந்திருக்கும். அதனால்தான், உன்னை அங்கே போக வேண்டாம் என்றேன்."
"போங்கள்!" என்று சொல்லிக் குவளையை மிஞ்சும் அழகு கொண்ட தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் அரசகுமாரி.
களவியல்
அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று.
பொருள்:
குவளை மலர்களுக்குக் காணும் சக்தி இருந்தால், அவை இவள் கண்களைப் பார்த்து, இவளுடைய கண்களுக்குத் தாம் ஒப்பாகவில்லையே என்று நினைத்துத் தலை குனிந்து நிற்கும்.
No comments:
Post a Comment