Monday, June 29, 2020

1109. முதுகில் ஒரு தட்டு!

வத்சலா:
ஆறு மாசத்துக்கு மேல பழகிக்கிட்டிருக்கோம். ஆனா இந்த சந்திரன் இவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நான் எதிர்பாக்கவே இல்ல. 

ரெண்டு பேரும் ஒரே கட்டடத்திலதான் வேலை செய்யறோம், ஆனா வெவ்வேறு அலுவலகங்கள்ள. என் அலுவலகம் ஆறாவது மாடி, அவனோடது நாலாவது மாடி. 

ஒருநாள் அவசரமா ஓடி வந்து லிஃப்டில ஏறினான் அவன். அப்ப லிஃப்டில நான் மட்டும்தான் இருந்தேன். அவனைப் பாத்து சிரிச்சேன். அவனும் சிரிச்சான். அப்புறம் ஒருநாள் கேஃப்டீரியால தற்செயலா சந்திச்சோம். அப்பதான் எங்களை அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசஆரம்பிச்சோம்.

என்னவோ தெரியல, சட்னு எனக்கு அவனைப் பிடிச்சிடுச்சு. அவனுக்கும் என்னைப் பிடிச்சுடுச்சு. அப்புறம் என்ன, சனி, ஞாயிறெல்லாம் சேர்ந்து சுத்த ஆரம்பிச்சோம். 

போன வாரம்தான் ரெண்டு பேர் வீட்டிலயும். சொல்லிட்டுக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம்னு முடிவு செஞ்சோம். 

அதுக்குள்ளே இந்த நிகழ்ச்சி நடந்துடுச்சு.

சந்திரன்:
வத்சலா இவ்வளவு அல்பமா நடந்துப்பான்னு எதிர்பாக்கல. அன்னிக்கு ஒரு ரெஸ்டாரண்ட்ல நாங்க உக்காந்துக்கிட்டிருக்கச்சே, என் மேலதிகாரி சகுந்தலா அங்கே வந்தா. பேருக்குத்தான் அவ மேலதிகாரி. எல்லார்கிட்டயும் நட்போடதான் பழகுவா. அவளை எல்லாரும் சக்குன்னுதான் கூப்பிடணும்னு கட்டளை போட்டிருக்கா.

நாங்க எல்லாரும் வா போன்னுதான் பேசிப்போம். யார் மேலதிகாரி, யாரு கீழ வேலை செய்யறவங்கன்னே கண்டு பிடிக்க முடியாது. அதுதான் எங்க கம்பெனியோட ஒர்க் கல்ச்சர்!

சகுந்தலா என்னைப் பாத்துட்டு, "ஹாய் சந்த்!" என்றவள், வத்சலாவைப் பாத்துட்டு, "யார் இவங்க? காதலியா, இல்லை சும்மா ஃபிரண்ட்தான்னு சொல்லப் போறியா?" என்றாள்.

"இவ வத்சலா. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு. இவங்க சகுந்தலா, என்னோட பாஸ்" ன்னு ரெண்டு பேரையும் ஒத்தருக்கொருத்தர் அறிமுகப்படுத்தி வச்சேன்.

"சகுந்தலா என்ன? சக்குன்னு சொல்லு. அப்படித்தானே நீ என்னைக் கூப்பிடுவ?" என்றவள் வத்சலாவைப் பார்த்து, "நீ ரொம்ப லக்கி வத்ஸ்! சந்த் ரொம்ப நல்ல பையன்" என்று சொல்லி விட்டு "என்ஜாய்!" என்று சொல்லி என் முதுகில தட்டிட்டுப் போனா.

அவ அந்தண்டை போனதுமே, வத்சலா என்னைப் பிடி பிடின்னு பிடிக்க ஆரம்பிச்சுட்டா. "யாரு இவ? உன்னை செல்லமா சந்த்னு கூப்பிடறா? முதுகிலே வேற தட்டறா!" என்றாள் கோபத்துடன்.

"அவ அப்படித்தான்! உன்னைக் கூட வத்ஸனு கூப்பிட்டா பாரு!" என்றேன் நான்.

"அது வேற! முதல்ல பாக்கற ஒத்தரை வா போன்னு கூப்பிடறது, பேரைச் சுருக்கிக் கூப்பிடறது இதெல்லாம் என்ன மானர்ஸ்?" ,என்று பொரிந்து தள்ளினாள் வத்சலா.

"அவ அப்படித்தான் வத்சலா. நீ எனக்கு மனைவியாப் போறவன்னு கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டிருப்பா!" என்றேன் நான். உண்மை அதுதானே?

"நீ அவளை சக்குன்னு கூப்பிடுவியாமே! அதையும் அவளே சொல்றா? அதுக்கென்ன அர்த்தம்? நீயும் அவளும் நெருக்கமானவங்கன்னு எங்கிட்ட காட்டிக்கறாளா? முதுகிலே வேற தட்டறா! நீயும் பேசாம இருக்க!" என்றாள் கோபம் குறையாமல்.

அப்பதான் எனக்கும் கோபம் வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுதான் இந்த முறிவுக்கே காரணமாயிடுச்சு. 

வத்சலா:
அவனோட பாஸ் சக்கு (பேரைப்பாரு! சகுந்தலாங்கற நல்ல பேரை ஏன் இப்படி சுருக்கிக்கணும், கவர்ச்சியா இருக்கணுங்கறதுக்காகவா?) அவன் முதுகிலே தட்டினப்ப ஏன் சும்மா இருந்தேன்னு நான் கேட்டதுக்கு, சந்திரன், "வேற என்ன செஞ்சிருக்கணும்? பதிலுக்கு நான் செல்லமா அவ கன்னத்தில தட்டி இருக்கணுமா?" ன்னு சொல்றான்.

எனக்கு வந்ததே ஒரு கோபம்! அவளைப் பத்தி மனசில அப்படி ஒரு ஆசை இருந்ததாலதான் அப்படிச் சொல்லி இருக்கான்? 

"அந்த சக்குவையே கட்டிக்கிட்டு அழு"ன்னு சொல்லிட்டு எழுந்து வந்துட்டேன். அவன் கூப்பிட்டான். நான் காதிலேயே போட்டுக்கல. ரெஸ்டாரண்ட் வாசல்ல நின்னுக்கிட்டிருந்த ஒரு ஆட்டோவில ஏறி வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறம் அவன்கிட்டேந்து நிறைய மெஸேஜ் வந்தது. அதையெல்லாம் படிக்காமயே அழிச்சுட்டேன். நிறைய தடவை கால் பண்ணினான். நான் எடுக்கவே இல்லை. 

ஒரு தடவை என் அலுவலகத்துக்கு வந்து என்னைப் பாக்கணும்னு சொல்லி அனுப்பினான். 'இப்ப ஒரு கால்ல இருக்கேன். இப்ப பாக்க முடியாது'ன்னு செக்யூரிட்டி கிட்ட சொல்லி அனுப்பிட்டேன். பக்கத்தில இருந்தவங்கல்லாம் கூட ஒரு மாதிரியாப் பாத்தாங்க. ஏன்னா அப்ப நான் வேலை எதுவும் இல்லாம சும்மாதான் உக்காந்துக்கிட்டிருந்தேன்!

அப்புறம் அவன் கிட்டேந்து எந்த மெஸேஜும், காலும் வல்ல. விட்டது சனியன்னு நிம்மதியா இருந்தேன்.

சந்திரன்:
விளையாட்டாப் பேசறதா நினைச்சு ஒரு வார்த்தை சொன்னதை அவ தப்பா எடுத்துக்கிட்டு காதலையே முறிச்சுப்பான்னு நான் எதிர்பாக்கல. விர்ருனு எழுந்து போயிட்டா. 

அதுக்கப்பறம் அவளுக்கு எத்தனையோ மெஸேஜ் அனுப்பியும், கால் பண்ணியும் பாத்தேன். அவ ஃபோனையே எடுக்கல. என் மெஸேஜையெல்லாம் படிச்சிருப்பாளான்னு தெரியல. 

அவ அலுவலகத்துக்குப் போய் அவளைப் பாக்கவும் முயற்சி செஞ்சேன். ஏதோ கால்ல இருக்கறதா சொல்லி என்னைப் பாக்க மாட்டேன்னுட்டா. அவ பொய்தான் சொல்றான்னு எனக்குத் தெரிஞ்சுது.

அதுக்கப்பறம் எனக்கு ரோஷம் வந்து, நானும் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்றதை விட்டுட்டேன். 

வத்சலா:
சந்திரனோட சண்டை போட்டுக்கிட்டுப் பிரிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு. இப்ப கொஞ்ச நாளா மனசில ஏதோ ஒரு வருத்தம். அவனோட பழகின நாட்களை நினைச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு! எங்கிட்ட எவ்வளவு அன்பா இருந்தான் அவன்! 

இப்ப மட்டும் எங்கிட்ட அவனுக்கு அன்பு இல்லேன்னு சொல்ல முடியுமா? நான்தானே கோவிச்சுக்கிட்டு வந்தேன்? அதுக்கப்புறம் கூட அவன் எத்தனையோ தடவை என்னைத் தொடர்பு கொள்ள முயற்சி செஞ்சான்! என் அலுவலகத்துக்குக் கூட வந்திருந்தானே!

ஒரு தடவை அவனோட பேசியிருந்தா எல்லாம் சரியாயிருக்குமோ? ஆனா அந்த சக்கு விவகாரம்? அதை அவ்வளவு சுலபமா எடுத்துக்க முடியுமா? 

கேஃப்டீரியால உக்காந்து யோசிச்சுக்கிட்டிருக்கச்சே, அங்கே சக்கு வந்தா. அவ கூட நாலஞ்சு பேர் வந்தாங்க. எல்லாரும் ஆண்கள்தான் அவ அலுவலகத்தில வேலை செய்யறவங்களாத்தான் இருக்கும். அவங்கள்ள ஒத்தனோட தோள்ள கையைப் போட்டுப் பேசிக்கிட்டே வந்தா? அவன் அவளோட காதலனா, இல்லை எல்லார்கிட்டயும் அவ அப்படித்தான் நடந்துப்பாளா? 

அவங்க  ஒரு மேஜையைச் சுத்தி  உக்காந்துக்கிட்டாங்க.  கொஞ்ச நேரம் அவங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். சக்கு அவங்க கையைப் பிடிச்சு அழுத்தறதும், முதுகிலேயோ, தோள்ளயோ தட்டிப் பேசறதையும் பாக்கச்சே அவ எல்லார் கிட்டயும் அப்படித்தான் நடந்துப்பான்னு புரிஞ்சுது. 

நான்தான் சந்திரன் விஷயத்தில அவசரப்பட்டுட்டேனோன்னு தோணுது.

சந்திரன்:
வத்சலாவைத் தொடர்பு கொள்றதை நிறுத்திட்டாலும் அவளை நினைக்காம இருக்க முடியல. எவ்வளவு அற்புதமான பொண்ணு அவ! ஒரு தடவை அவ கிட்ட ஃ போன்ல  பேசினாக் கூட சமாதானப்படுத்திடலாம். ஆனா அவ போனையே எடுக்க மாட்டேங்கறாளே!

ரெண்டு மாசம் ஆயிடுச்சு. ஒருவேளை இப்ப அவ மனசு மாறி இருக்கலாம். மறுபடி ஒரு தடவை ஃபோன் பண்ணிப் பாக்கலாமா? 

அவளுக்கு ஃபோன் பண்றதுக்காக போனைக் கையில எடுத்தப்ப, ஃபோன் அடிச்சது.

"ஹாய் சந்த்! ஐ ஆம் சாரி! தப்பு என் மேலதான்!" என்றாள் வத்சலா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

பொருள்
 உடல், ஊடலின் காரணத்தைப் புரிந்து கொள்ளுதல், பிறகு இணைதல் ஆகியவை காதல் வாழ்வு  நிறைவேறப் பெற்றவர்  பெற்ற பயனாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...