Wednesday, June 10, 2020

1108. காற்று வெளியிடை!

"காதல்னாலே பல பேர் அதுக்குக் குறுக்கே  வருவாங்க" என்றான் சுந்தர்.

"யாரு பெற்றோர்கள்தானே? நாமதான் நம் பெற்றோர்கள் கிட்ட பேசி, அவங்களை நம் காதலுக்கு சம்மதிக்க வச்சுட்டமே?" என்றாள்  பிரியா. 

"பெற்றோர்கள் மட்டும் இல்ல. சமூகம்  கூட."

"சமூகம்னா?"

"சமூகம்னா, பல பேர். அக்கம் பக்கத்தில இருக்கறவங்க நம்மைப் பத்தி வம்பு  பேசுவாங்க. கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் நம் நண்பர்கள், நம்மோட வேலை செய்யறவங்க இது மாதிரி சில பேர் நமக்கு நல்லது செய்யறதா நினைச்சுக்கிட்டு, நமக்கு உபதேசம் பண்ணுவாங்க. காதல் ஒரு மாயைன்னு சொல்லுவாங்க. காதலன் ஏமாத்திடுவான்னு, காதலியோட நண்பர்கள் அவகிட்ட சொல்வாங்க."

"ஆமாம். எங்கிட்ட கூட சில பேர் சொன்னாங்க. ஆனா, நான் அதைப் பொருட்படுத்தல. உன்கிட்டயும் சில பேர் அது மாதிரி சொல்லி இருப்பாங்களே!"

"ஆமாம். இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் ஒரே நேரத்தில பல ஆண்களைக் காதலிப்பாங்கன்னு சொன்னாங்க."

"அதுக்கு நீ என்ன சொன்னே?"

"ஒரே நேரத்தில பல பேரைக் காதலிக்காம, ஒருத்தருக்கப்புறம் இன்னொருத்தர்னு காதலிச்சா பரவாயில்லையான்னு கேட்டேன்!"

"என் காதலி அப்படிப்பட்டவ இல்லேன்னு சொல்லி இருக்க வேண்டாமா?"

"என் காதலி எப்படிப்பட்டவன்னு மத்தவங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?"

"அப்புறம் வேற யாரு குறுக்கே வருவாங்க?"

"பார்க்லேயோ, பீச்லேயோ உக்காந்திருந்தா, சில சமயம் யாராவது போலீஸ்காரர் வந்து விசாரிப்பாரு. நல்ல வேளையா நமக்கு அப்படி நடக்கல!"

"அது சரி. நாமதான் எல்லாத் தடைகளையும் தாண்டி வந்துட்டமே! காதலுக்குக் குறுக்கே வரவங்களைப் பத்தி, இப்ப ஏன் பேசிக்கிட்டிருக்கே?" என்றாள் பிரியா.

"காதலுக்குக் குறுக்கே வரவங்களை சமாளிச்சுட்டோம். இப்ப, காதலர்களான நமக்குக் குறுக்கே வரவங்களை சமாளிக்கணும்!" என்றான் சுந்தர்.

"நமக்குக் குறுக்கே யார் வரப் போறாங்க?"

"வந்துட்டாங்களே!"

"யாரு?"

"காத்துதான். காத்து, தென்றல் மாதிரி இதமா இருந்தாலும், நமக்கு நடுவிலே வீசி, நம்மைப் பிரிக்கிற மாதிரி இருக்கே!"

"அதுக்கென்ன செய்ய முடியும்? காத்தைத் தடுத்து நிறுத்தவா முடியும்?"

"அது முடியாது. அதனால, காத்து புகக் கூட இடைவெளி இல்லாத அளவுக்கு உன்னைத் தழுவிக்கப் போறேன்!" என்று சொல்லி, பிரியாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் சுந்தர்.

"மெதுவா. நீ அழுத்தற அழுத்தத்தில என் எலும்பெல்லாம் உடைஞ்சுடும்  போல இருக்கு" என்றாள் பிரியா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

பொருள்
காற்று கூட இருவருக்கும் இடையில் புக முடியாதபடி இறுகத் தழுவிக் கொள்வது, காதலர் இருவருக்கும் மிக இனிமையானதாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...