"அப்படியா?" என்றாள் சந்திரகலா.
"என்ன அப்படியா? நீ கூட என்னைக் கேலி செய்யல - என்னடி, உன் கண்ணு அலை பாய்ஞ்சுக்கிட்டே இருக்குன்னு?"
"இப்ப ஞாபகம் வருது. ஆனா அப்ப, நீ மழை வருதான்னு பாக்கறதா இல்ல எங்கிட்ட சொன்னே? நான் கூட 'மழை வருதான்னு பாக்க எல்லாரும் வானத்தையில்ல பாப்பாங்க! ஆனா, நீ ஒரு பக்கமாத் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டே வரியே?' ன்னு கேட்டேன். ஓ, அவரைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டிருந்தியா?"
காமினி மௌனமாக இருந்தாள்.
"பாத்த, பழகின. காதலிச்ச. ஆனா, கல்யாணம் பண்ணிக்கறதுக்குள்ள அவர் எங்கேயோ காணமப் போயிட்டாரு. அதுதானே கதை?" என்றாள் சந்திரகலா.
"காணாம எல்லாம் போகல. எங்கேயோ தொலைதூரம் போய் வியாபாரம் செஞ்சு பணம் சேத்துக்கிட்டு வந்து, அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டுத்தான் போனாரு!" என்று காமினி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் கண்களில் நீர் வழிந்தது.
தெருவில் யாரும் பார்த்து விடக் கூடாதே என்று சேலைத் தலைப்பால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் காமினி.
'அன்று இந்தக் கண்கள்தான் தாங்கள் காதலனைப் பார்ப்பது யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மறைத்து மறைத்துப் பார்த்தன. இன்று அதே கண்கள் காதலனின் பிரிவை நினைத்து அழுகின்றன. அவை அழுவதை மறைக்க. அவற்றிலிருந்து வரும் கண்ணீரைக் கைகள் துடைக்கின்றன. ஒருபுறம், இதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. மறுபுறம், பரிதாபமாகவும் இருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டாள் சந்திரகலா.
கற்பியல்
பொருள்:
அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கிய கண்கள், இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத் தக்கது.
No comments:
Post a Comment