"ஏன் அப்படிச் சொல்ற?" என்றாள் காந்தவல்லி
"நீ ஒரு வணிகரோட மகள். நான் ஒரு மாலுமி. உனக்கும் எனக்கும் பொருத்தம் இல்லை!"
"என் கண்கள் நீதான் எனக்குப் பொருத்தமானவன் என்று சொல்கின்றன!"
"கண்கள் செல்லுமிடத்துக்கெல்லாம் மனதும் சென்றால்? மனம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்!"
"இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை!"
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தையில் மணிமாறனைச் சந்தித்து, முதல் பார்வையிலேயே அவன் மீது காதல் கொண்டு, அவனிடம் தன் காதலைத் தெரிவித்தபோது நிகழ்ந்த இந்த உரையாடல், காந்தவல்லியின் மனதில் வந்து போனது.
பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல் மணிமாறனை மணம் புரிந்த இந்த இரண்டு ஆண்டுகளில், மணிமாறன் அவளுடன் இருந்த நாட்களை விடக் கடலில் கழித்த நாட்கள்தான் அதிகம்.
மணிமாறன் கப்பலில் வேலை செய்ய வேண்டியதில்லை, தன் வணிகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று காந்தவல்லியின் தந்தை கூறியதை மணிமாறன் ஏற்கவில்லை. தான் வேலை செய்து பொருள் ஈட்டி, அதன் பிறகு காந்தவல்லியின் தந்தையின் வணிகத்தில் சிறிதளாவாவது முதலீடு செய்த பிறகுதான், அவர் வணிகத்தில் தானும் சேர்ந்து கொள்ள முடியும் என்று அவன் உறுதியாகக் கூறி விட்டான்.
"ஏன் உன் கண் இவ்வளவு சிவந்திருக்கு. அழுதியா என்ன?" என்றாள் காந்தவல்லியின் தாய்.
"பின்னே, புருஷன் என்னைத் தனியா விட்டுட்டுக் கடலுக்குப் போனா, நான் சிரிச்சுக்கிட்டா இருக்க முடியும்?" என்றாள் காந்தவல்லி, எரிச்சலுடன்.
"இந்தத் திமிர்ப் பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல! காதலிக்கறது பெரிசு இல்லடி. உன் புருஷன் சம்பாதிச்சுப் பொருள் சேர்க்கணுங்கறதுக்காகக் கப்பல்ல கஷ்டப்பட்டு வேலை செய்யறான். அவனோட அன்பு, அக்கறை, பொறுப்புணர்ச்சி இதையெல்லாம் புரிஞ்சுக்காம, அவன் உன்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதை நினைச்சு அழறது முட்டாள்தனம்னு உனக்குப் புரியல!"
'ஒருவேளை அவனுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கும் சேர்த்துத்தான் என் கண்கள் கலங்குகின்றனவோ என்னவோ!" என்று நினைத்துக் கொண்டாள் காந்தவல்லி.
கற்பியல்
பொருள்:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
No comments:
Post a Comment