Friday, October 7, 2022

1150. இது நடந்தால், அது நடக்கும்!

"குமரனோட நான் பழக ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகுது. ஊர்ல இதைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?" என்றாள் குழலி.

"ஏண்டி, நீ என்ன செய்யறேன்னு பார்த்து, அதைப் பத்திப் பேசறதுதான் ஊருக்கு வேலையா?" என்றாள் அவள் தோழி சிந்து.

"அப்படின்னா, யாரும் எதுவும் பேசிக்கலையா?" என்றாள் குழலி.

"என் காதில எதுவும் விழலை!" என்ற சிந்து, "நீ கேக்கறதைப் பார்த்தா, இப்படிப் பேசிக்காதது உனக்கு ஏமாற்றமா இருக்கற மாதிரி இருக்கே!" என்றாள், தொடர்ந்து.

குழலி பதில் சொல்லவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, சிந்து குழலியிடம், "உன் காதலைப் பத்தி ஊர்ல என்ன பேசிக்கறாங்கன்னு நீ எந்த வேளையில கேட்டியோ தெரியலை, நீ கேட்ட அடுத்த நாளிலேந்தே ஊர்ல நிறைய பேரு உன் காதலைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க!" என்றாள்.

"அப்படியா?" என்றாள் குழலி, ஆர்வத்துடன்.

"ஐயையோன்னு பதட்டப்படுவேன்னு பாத்தா, அப்படியான்னு மகிழ்ச்சியோட கேக்கற!" என்றாள் சிந்து, வியப்புடன்.

"அப்படி ஒண்ணும் இல்லை" என்றாள் குழலி, சங்கடத்துடன்.

தங்கள் காதலைப் பற்றி ஊரார் பேச வேண்டும் என்ற தன் விருப்பம் நிறைவேறினால், தன் காதலர் தன்னைக் கைப்பிடிக்க வேண்டும் என்ற தன் விருப்பமும் நிறைவேறும் என்று தன் மனதில் தான் போட்டு வைத்திருந்த கணக்கைத் தோழியிடம் சொன்னால், அவள் அதைக் குருட்டுக் கணக்கு என்று கேலி செய்வாளோ என்ற அச்சத்தில், தன் மனக்கணக்கை சிந்துவிடம் குழலி பகிர்ந்து கொள்ளவில்லை.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

பொருள்:
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி, என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...