"அதை எத்தனை தடவை சொல்லுவீங்க?" என்றாள் மணிமேகலை.
"நீ மறந்துட்டியோன்னு நினைச்சேன்!"
"ஏன், நீங்க ஊருக்குப் போகறீங்கங்கறதைக் கொஞ்ச நேரம் மறந்து நான் சந்தோஷமா இருக்கக் கூடாதா?"
"உன் பேச்சே எனக்குப் புரியல. நாம காதலிச்சபோதெல்லாம், நீ என்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசுவ! இப்ப ஏன் இப்படிக் கடுமையாப் பேசறே?"
"சரி. இனிமையாவே பேசறேன். அன்புள்ள கணவரே! நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. நீங்க திரும்பி வர வரையிலேயும், உங்களைப் பிரிஞ்சு நான் சந்தோஷமா இருக்கேன்! இது போதுமா?" என்றபோதே, மணிமேகலை தன் கண்களில் பெருகிய நீரை மறைக்கச் சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.
மூடிய கண்களிலிருந்து வழிந்த நீர் அவள் கன்னங்கள் வழியே இறங்கியது.
மணிமேகலையின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட கந்தன், "எனக்கு மட்டும் பிரிவுத் துயர் இருக்காதா? நீ இப்படிக் கண்ணீர் விடறதை நினைச்சா, போற இடத்தில என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.
கணவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மணிமேகலை, "விடுங்க. நீங்க இப்படி அணைச்சுக்கறப்பல்லாம், இன்னும் சில மாதங்களுக்கு இந்த அணைப்பு கிடைக்காதேன்னு நினைச்சு அழுகைதான் வருது. காதலிச்சப்பல்லாம், உங்களைக் கண்ணால பார்த்தே சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தேன். இப்ப கல்யாணத்துக்குப் பிறகு நாம நெருக்கமானப்பறம், அந்த நெருக்கம் கொஞ்ச நாளைக்குக் கிடைக்காதுன்னு நினைச்சாலே அழுகை வருது!" என்றாள்.
சட்டென்று அவன் மார்பில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டு விம்ம ஆரம்பித்தாள் மணிமேகலை.
கற்பியல்
பொருள்:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போது கூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!
No comments:
Post a Comment