"நான் சொல்ல மாட்டேன்!" என்று சொல்லி நந்தினி சிரித்தபோது, 'நான்' என்ற வார்த்தைக்கு அவள் அதிகம் அழுத்தம் கொடுத்தது போல் வேகவதிக்குத் தோன்றியது.
கனகவல்லி என்ற தோழியின் திருமணத்துக்கு வேகவதியும், நந்தினியும் சென்றிருந்தனர். அவர்களுடைய தோழிகள் சிலரும் அங்கே வந்திருந்தனர்.
மணப்பெண்ணின் தோழிகள் என்ற உரிமையிலும், பொறுப்பிலும் வேகவதியும், நந்தினியும், இன்னும் சில தோழிகளும் கல்யாண வேலைகளில் உதவினர்.
வேகவதி உணவு பரிமாறுவதில் உதவினாள்.
திருமணம் முடிந்ததும், மாலையில், வேகவதி தன் தோழிகளுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாள்.
"என்ன வேகவதி, நீ உணவு பரிமாறினதில எல்லாருக்கும் ரொம்ப திருப்தியாம். 'அந்தப் பொண்ணு எப்படி ஓடியாடி வெவ்வேறு உணவுவகைகளை எடுத்துக்கிட்டு வந்து எல்லாருக்கும் பரிமாறினா!' ன்னு கல்யாணத்துக்கு வந்திருந்த பல பேரும் பாராட்டினதை நான் கேட்டேன்!" என்றாள் ஒரு தோழி.
"ஏதோ என்னால முடிஞ்சதைச் செஞ்சேன்!" என்றாள் வேகவதி, சங்கடத்துடன்.
"ஆமாம், கல்யாணத்துக்கு உன்னோட ஆள் வந்திருந்தார் போல இருக்கே!" என்றாள் வாருணி என்ற தோழி, குறும்பாகச் சிரித்தபடி.
"யாரு? அப்படி யாரும் இல்லையே!" என்றாள் வேகவதி திடுக்கிட்டு. உடனே கடைக்கண்ணால் நந்தினியைப் பார்த்தாள். நந்தினி தான் சொல்லவில்லை என்பது போல் தலையை மெல்ல ஆட்டினாள்.
"வீரகுமாரன்தான்! அவர்தானே உன்னோட ஆளு?" என்றாள் வாருணி.
"சேச்சே! அப்படியெல்லாம் எதுவும் இல்லை" என்றாள் வேகவதி.
"எங்ககிட்ட வேணும்னா நீ இல்லைன்னு சொல்லலாம். ஆனா, நீ அவருக்கு விழுந்து விழுந்து பரிமாறினதைப் பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் இது தெரிஞ்சுடுச்சே! அதுவும், நீ அவருக்கு மூணாவது தடவையா பாயசம் போடப் போனப்ப, 'எங்களுக்கெல்லாம் கொஞ்சம் மிச்சம் வைம்மா! இன்னும் சில பேர் வேற சாப்பிட வேண்டி இருக்கு!' ன்னு ஒத்தர் சொல்ல, அதைக் கேட்டு எல்லாரும் பெரிசாச் சிரிச்சாங்களே! நீ பெரிய அழுத்தக்காரிதான். ஆனா, உன்னோட காதல் உன்னை அறியாமலேயே எல்லார் முன்னாலேயும் வெளிப்பட்டுடுச்சே!" என்று வாருணி சொல்லிச் சிரிக்க, மற்ற தோழிகளும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்.
கற்பியல்
நிறையழிதல் (தயக்கம் உடைபடுதல்)
பொருள்:
மன உறுதி கொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக் கொண்டு, மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே!
No comments:
Post a Comment