அன்பால் இணைந்த இரு நெஞ்சங்களால் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ள முடியாதா என்ன? இங்கிருக்கும் என் நெஞ்சம் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் அவர் நெஞ்சத்தைச் சென்றடைவதற்கு, தூரம் ஒரு தடையாக இருக்க முடியாதே!
"நெஞ்சே! என் காதலரிடம் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?:
உங்கள் பிரிவால் மதி மிகவும் இளைத்து விட்டாள். எந்த அளவுக்கு இளைத்து விட்டாள் என்றால், அவள் தோள் எலும்புகள் தோலைத் துருத்திக் கொண்டு வெளியே வரப் போவது போல் இளைத்து விட்டன!
அவளைப் பார்ப்பவர் ஒவ்வொருவரையும் அவை தங்களைப் பற்றியே பேச வைக்கின்றன. நேற்று கூட ஒரு பெண்மணி, 'என்னடி மதி, உன் தோள் எலும்புக்கு மேல இருந்த சதையைக் காணோம்? காக்கா கொத்திக்கிட்டுப் போயிடுச்சா என்ன?' என்று மதியைக் கேலி செய்தாள்.
அது மட்டுமல்ல. மதி இவ்வளவு இளைத்ததைப் பார்த்துப் பலரும் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் காதலன் கொடியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களை இகழ்ந்து பேசுகிறார்கள்.
உங்கள் மீது உயிர்க் காதல் கொண்டுள்ள மதிக்கு இத்தகைய பேச்சுக்கள் எவ்வளவு மன வருத்தத்தைக் கொடுக்கும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?
எனவே, உடனே கிளம்பி வந்து, மதியைச் சேர்ந்து, அவள் மன வருத்தத்தையும், அதனால் அவள் உடலுக்கு ஏற்பட்டுள்ள வருத்தத்தையும் போக்கி, உங்கள் மீது ஊர் சுமத்தும் அவப்பெயரையும் போக்கிக் கொள்ளுங்கள்.
என் அருமை நெஞ்சே! நீ மட்டும் இந்தச் செய்தியை அவரிடம் சேர்த்து அவர் விரைவிலேயே திரும்ப வகை செய்து விட்டால், நீ பெருமை பெற்று விளங்குவாய்!"
சொல்ல வேண்டிய செய்தியைத் தன் நெஞ்சுக்குச் சொன்னதும், சில விநாடிகள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் மதி.
'மனோவேகம் என்கிறார்களே! அப்படியானால், என் நெஞ்சம் இதற்குள் இந்தச் செய்தியை என் காதலரின் நெஞ்சத்துக்குக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். இந்தச் செய்தியைக் கேட்ட பிறகாவது, அவர் உடனே கிளம்பி வருகிறாரா என்று பார்க்கலாம்!' என்று நினைத்துக் கொண்டாள் மதி.
கற்பியல்
உறுப்பு நலனழிதல்
பொருள்:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
No comments:
Post a Comment