Thursday, October 5, 2023

1238. தழுவிய கைகள்!

"ஆதிரை!"

"ம்..."

"ஏன் பேச மாட்டேன் என்கிறாய்?"

"உங்கள் அணைப்பில் இருக்கும்போது, எனக்கு எப்படிப் பேச்சு வரும்?"

"இப்போது பேசி விட்டாயே!"

ஆதிரையைக் கேலி செய்வது போல் கைதட்டினான் இளவழகன்.

ஆதிரை சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள்.

"என்ன ஆயிற்று, ஆதிரை!" என்றான் இளவழகன், பதற்றத்துடன்.

"ஒன்றுமில்லை" என்று ஆதிரை கூறினாலும், அவள் உடலில் ஒரு சோர்வு தெரிந்ததை இளவழகன் கவனித்தான்.

ஆதிரையின் முகத்தை நிமிர்த்திப் பார்த்த இளவழகன், "என்ன இது? உன் நெற்றி வெளிரிப் போயிருக்கிறது!" என்றான், கவலையுடன்.

"அதைப் பசலை என்று சொல்வார்கள்!"

"அப்படியென்றால்?"

"காதலன் பிரிவால் காதலிக்கு ஏற்படும் உடற்சோர்வு, அதனால் சருமம் வெளிரிப் போவது."

"நான் உன்னைப் பிரியவில்லையே! உன்னுடன்தானே இருக்கிறேன்!"

"இப்போது கைதட்டினீர்களே?"

"ஆமாம். அது எப்படிப் பிரிவாகும்?"

"என்னை அணைத்துக் கொண்டிருந்த கைகளை விடுவித்துக் கொண்டுதானே கைதட்டினீர்கள்! அது  ஒரு பிரிவுதானே?"

"இது ஒரு பிரிவா? உன்னை அணைத்திருந்த கைகளை நான் விலக்கிக் கொண்ட கணநேரப் பிரிவையே உன்னால் தாங்க முடியாதென்றால், நான் உன்னை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்றால், அந்தப் பிரிவை எப்படித் தாங்குவாய்?"

"அப்படி வாயால் கூடச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்கும்போதே, எனக்குப் பசலை படிந்த உணர்வு ஏற்படுகிறது!" என்றாள் ஆதிரை, காதுகளைக் கைகளால் பொத்தியபடி. 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

பொருள்:
தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறிய பிரிவைக் கூடப் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...