"நினைத்துப் பார்! எத்தனை சம்பவங்கள்!
"அன்று நீயும் உன் மூன்று தோழிகளும் ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்தபோது, பரிதி எதிரில் வந்தார். உன் தோழிகள் உன்னையும் அவரையும் இணைத்துப் பேசி அவரைக் கேலி செய்தனர். ஆனால் அவர் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். உன் முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இல்லை.
"இன்னொரு முறை, நீ அவரைத் தனியே சந்தித்தபோது, வெட்கத்தை விட்டு உன் காதலைத் தெரிவித்தாய். அவர் பதில் சொல்லாமல் சிரித்து விட்டுப் போய் விட்டார்.
"இவ்வளவு ஏன்? பரிதியின் மீது உனக்கிருக்கும் ஆழ்ந்த காதலைச் சொற்களில் வடித்து, உன் உணர்ச்சிகளைக் கொட்டி ஒரு மடல் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தாய். அதற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை.
"அவருக்கு உன் மேல் அன்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
"ஆனால், நீ என்ன செய்கிறாய்? காலை முதல் இரவு வரை அவரையே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறாய். இரவிலும் அவரையே நினைத்தபடி, தூங்காமல் விழித்திருந்து உன் உடலை வருத்திக் கொள்கிறாய்.
"ஏ, நெஞ்சே! உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ முட்டாளா? எதையுமே அறியாமல், செய்வதையே செய்து கொண்டிருக்கிறாயே! உன்னை என்னால் திட்டக் கூட முடியவில்லை. அதனால், 'நீ வாழ்க!' என்று வாழ்த்துகிறேன்!"
"என்னடி, கண்ணாடி முன்னால நின்னு பேசிக்கிட்டிருக்கே?" என்றபடியே, உள்ளிருந்து வெளியே வந்தாள் மாலினியின் தாய்.
"ஒண்ணுமில்லையே!" என்று கூறி விட்டு, மாலினி அங்கிருந்து அகன்று சென்றாள்.
கற்பியல்
நெஞ்சொடு கிளத்தல்
பொருள்:
என் நெஞ்சே! நீ வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!
No comments:
Post a Comment