Monday, October 16, 2023

1249. இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி...

சுரபி கோவிலுக்குச் சென்றிருந்தாள். கடவுளை தரிசித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, கோவில் மண்டபத்தில் ஒருவர் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

"இங்கே பாருங்கள், எத்தனை பேர் சந்நிதிக்குள் போய் விட்டு வருகிறார்கள்! அவர்கள் கடவுளை தரிசித்து விட்டா வருகிறார்கள்? இல்லை. அங்கே கடவுள் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு வருகிறார்கள்! அவர்கள் கடவுளை தரிசித்திருந்தால், அங்கிருந்து வெளியே வருவார்களா என்ன?

"நாளை இன்னொரு கோவிலுக்குப் போய், அங்கே தேடுவார்கள். அல்லது இந்தக் கோவிலுக்கே திரும்பவும் வந்து தேடுவார்கள். தங்கள் வீட்டு பூஜை அறையில் தேடுவார்கள். வீட்டில் கண்ணாடிச் சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் கடவுளின் படத்தில் தேடுவார்கள்."

'என்ன இது, கோவிலில் வந்து நாத்திகரைப் போல் பேசுகிறாரே!' என்று நினைத்த சுரபி, அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கவனித்தாள்.

"கடவுள் எங்கே இருக்கிறாரோ, அங்கே தேட வேண்டும். அதை விட்டு, மற்ற இடங்களில் தேடினால், அவர் எப்படி உங்களுக்குக் காட்சி அளிப்பார்? கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா? எல்லோரும் உங்கள் நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள். டிக் டிக்கென்று துடிக்கிறது அல்லவா? அது உங்கள் நெஞ்சத்தில் கடவுள் எப்போதுமே குடியிருக்கிறார் என்பதைக் காட்டும் துடிப்புதான்! ஆமாம், கடவுள் இருப்பது உங்கள் நெஞ்சத்தில்தான்."

இதைக் கேட்டதும், ஏதோ பொறி தட்டியது போல், அங்கிருந்து கிளம்பினாள் சுரபி.

வீட்டுக்குச் செல்லும் வழியில், அவள் சிந்தனை இவ்வாறு ஓடியது.

'சில வாரங்களுக்கு முன், இதே கோவில் வாசலில், அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே, அவர் என் கண்கள் வழியே என் இதயத்துக்குள் புகுந்து, அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி விட்டார்!

'இதை உணராமல், அவரை மீண்டும் சந்திக்க முடியுமா என்று ஊரில் இருக்கும் பல இடங்களுக்கும் சென்று பார்த்து வருகிறேன். இன்று இந்தக் கோவிலுக்கு வந்தது கூட அந்த நோக்கத்தில்தான்! கடவுளை வணங்குவது என்பது நானே கற்பித்துக் கொண்ட ஒரு காரணம்தானே!

'அந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் பேச்சைக் கேட்டதும்தான் எனக்கு உண்மை விளங்கியது. உள்ளத்தில் குடியிருப்பவரை, ஊரெல்லாம் தேடுவது என்ன அறியாமை! என் உள்ளத்தில் அவர் குடியிருப்பதை உணர்ந்து, எப்போதும் அவரை நினைத்துக் கொண்டிருந்தால், அவர் என் கண் முன்னால் வந்து நிற்க மாட்டாரா என்ன?

"ஏ, நெஞ்சமே! அவர் உனக்குள்தானே இருக்கிறார்? அதை உணராமல், வெளியே பல இடங்களிலும் அவரைத் தேடி அலையும்படி என்னைப் பணித்துக் கொண்டிருக்கிறாயே!'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

பொருள்:
உள்ளத்திலேயே காதலர் குடிகொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...