"உடம்பு நல்லா இருக்கறதாலதானே அம்மா தினமும் கோவிலுக்குப் போறேன்!" என்றாள் மணிமேகலை.
"ஆமாம், தினம் கோவிலுக்குப் போய் என்ன வேண்டிக்கற? உன் புருஷன் சீக்கிரம் திரும்பி வரணும்னா? அவர்தான் திரும்பி வர அஞ்சாறு மாசம் ஆகும்னாரே! நீ வேண்டிக்கிட்டதுக்காக, ஒரு மாசத்தில திரும்பி வந்துடுவாரா என்ன?"
"அம்மா! அவர் ஒரு லட்சியத்தோடதான் ஊருக்குப் போயிருக்காரு. அவருக்குத் தொழில் செய்யணும்னு ஆசை. ஆனா, தொழில்ல முதலீடு செய்ய அவர்கிட்ட பணம் இல்லை. அதனாலதான், ஒரு வியாபாரியோட வெளிநாட்டுக்குப் போயிருக்காரு. அவருக்கு வியாபாரத்தில உதவினா, லாபத்தில பங்கு கொடுக்கறதா அந்த வியாபாரி சொல்லி இருக்காரு. அந்த வியாபாரிக்கு நிறைய லாபம் சம்பாதிச்சுக் கொடுத்து, அதன் மூலமா தனக்கும் ஒரு நல்ல பங்கு கிடைக்க வழி செய்யணுங்கற லட்சியத்தோடதான் அவர் போயிருக்காரு. அவர் லட்சியம் நிறைவேறணும்னுதான் கடவுள்கிட்ட வேண்டிக்கறேன்!"
"நல்ல விஷயம்தான். இவ்வளவு தெளிவு இருக்கறவ, உன்னோட உடம்பைப் பாத்துக்கணும் இல்ல? ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கி ஆரோக்கியமா இருக்க வேண்டாமா?"
"என்னம்மா செய்யறது. அவரைப் பிரிஞ்சு இருக்கறதால, எனக்குப் பசி எடுக்கறதில்ல, தூக்கம் வரதில்ல."
"நான் கடுமையா சொல்றேன்னு நினைக்காதே. இப்படி எல்லாம் இருந்தா, உன் உயிருக்கே ஆபத்தா முடியும்!" என்றாள் மாதவி, சலிப்புடன்.
"அம்மா! அவர் லட்சியம் நிறைவேறணும்னு வேண்டிக்கத்தான் கோவிலுக்குப் போறேன். அவரைப் பிரிஞ்சு இருக்கறப்ப, எனக்கு எதிலியுமே ஆர்வம் இல்ல. நான் உயிரோட இருக்கறதே அவர் தன் லட்சியத்தை நிறைவேற்றிட்டுத் திரும்பி வரதைப் பாக்கணுங்கறதுக்காகத்தான். அதனால, உயிரோட இருக்கறதுக்குத் தேவையான அளவுக்கு அப்பப்ப கொஞ்சம் சாப்பிடறேன். கவலைப்படாதே! அவர் திரும்பி வந்ததும், என் உடம்பு கொஞ்ச நாள்ள தேறிடும்!" என்றாள் மணிமேகலை.
"இப்படிப் பைத்தியக்காரத்தனமாப் பேசறவகிட்ட என்ன சொல்ல முடியும்?" என்று மகளின் காதில் கேட்கும்படி முணுமுணுத்தாள் மாதவி.
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment