திரும்ப வருவதானால் கப்பலில் வந்து துறைமுகத்தில் இறங்குவார். அவர்கள் ஊரிலிருந்து துறைமுகம் இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.
அந்த இரண்டு காதத் தொலைவையும் நடந்தே வருவாரோ, அல்லது மாட்டு வண்டி பிடித்து வருவாரோ தெரியாது.
மாட்டு வண்டி பிடித்து வந்தாலும், சாலையில் இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்துதான் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டும்.
அவர் தொலைதூரத்தில் வருவதைப் பார்க்க முடிந்தால், தனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள் அஞ்சனை.
வாசலில் நின்று பார்த்தாள் அஞ்சனை. அந்த வளைந்த தெருவின் கோடி கூட அவள் வீட்டு வாசலிலிருந்து தெரியவில்லை.
சற்றுத் தொலைவில் ஒரு மரம் இருந்தது. அதன் மேல் ஏறி, அதன் கிளை ஒன்றில் அமர்ந்து பார்த்தால், அவர் தொலைவில் உள்ள சாலையில் நடந்து வருவதைக் கூடப் பார்க்க முடியும்.
'என்னால் அந்த மரத்தில் ஏற முடியுமா? ஏறித்தான் பார்ப்போமே!'
விறுவிறுவென்று நடந்து மரத்தின் அருகில் வந்தாள் அஞ்சனை. சேலையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, மரத்தில் காலை வைத்து ஏறினாள்.
'என்ன வியப்பு! மிக விரைவிலேயே மரத்தில் ஏறி, ஒரு உயர்ந்த கிளைக்குப் போய் விட்டோமே!'
கிளையில் உட்கார்ந்தபோது, சாலை தெரிந்தது. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவர்களிடையே தன் காதலனின் முகம் தெரிகிறதா என்று பார்த்தாள் அஞ்சனை.
'ஐயோ, இது என்ன? கிளையில் வைத்திருந்த கால் நழுவுவது போல் தோன்றுகிறதே!'
மரக்கிளையிலிருந்து கீழே விழுந்தாள் அஞ்சனை.
நினைவு இருந்தது. எனவே, தான் இன்னும் இறந்து விடவில்லை என்று நினைத்துக் கண்களைத் திறந்து பார்த்தாள் அஞ்சனை.
"ஏண்டி, ராத்திரி முழுக்கத் தூங்காம, பகலிலேயே விசுப்பலகை* மீது உக்காந்துக்கிட்டே தூங்கிட்டுக் கீழே விழுந்திருக்க. எங்கேயாவது சிராய்ப்பு இருக்கான்னு பாரு!" என்றாள் அஞ்சனையின் தாய்.
* கால்கள் பதிக்கப்பட்ட மரப்பலகை (பெஞ்ச்)
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment