"ஆமாம். அவர் வேலைதான் முக்கியம்னு நினைக்கிறாரு. எனக்குக் கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கறதில்லை. அதானால, வேலை முக்கியமா, நான் முக்கியமான்னு தீர்மானிச்சுக்கங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!" என்றாள் சாந்தா.
"வேலை வேண்டாம், நீதான் முக்கியம்னு அவர் வந்துட்டா, கல்யாணத்துக்குப்புறம் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?"
"வேலை வேண்டாம்னு நான் சொல்லியே! எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கன்னுதானே சொல்றேன்?"
"இந்த ஊடல் எத்தனை நாளைக்கோ, பார்க்கலாம்!?"
"அவர் என் வழிக்கு வர வரையில, நான் அவர்கிட்ட பேசப் போறதில்லை!" என்றாள் சாந்தா.
"வீட்டுக்குள்ளே வரும்போதே வெண்ணெய் காய்ச்சற மணம் மூக்கைத் துளைக்குதே!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் அம்பிகா.
"உள்ளே அம்மா வெண்ணெய் காய்ச்சிக்கிட்டிருக்காங்க" என்ற சாந்தா, சற்றுத் தயங்கி விட்டு, "அவர் வராரு இல்ல, அதான்!" என்றாள்.
"அவர் வராரா? நேத்திக்குத்தான் சண்டை போட்டுக்கிட்டீங்க. அதுக்குள்ள சரியாயிடுச்சா? 'ஒருநாள் கூத்துக்கு மீசையை வச்சான்' ங்கற மாதிரி இருக்கு. அப்ப, அவர் உன் வழிக்கு வந்துட்டார்னு சொல்லு!" என்றாள் அம்பிகா, சிரித்துக் கொண்டே.
"அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, எங்களுக்குள்ள இப்ப எந்தச் சண்டையும் இல்லை."
"அது எப்படி? நீ சொன்னதை அவர் ஏத்துக்காதபோதே, நீ எப்படி சமாதானம் ஆனே, அதுவும் ஒரே நாளில?"
"போடி! ஒத்தரோட நெருங்கிப் பழகினப்புறம், சண்டை போட்டுக்கிட்டுப் பிடிவாதமா இருக்கறதுக்கு என் மனசு என்ன கல்லா?" என்றாள் சாந்தா.
"கல்லு இல்ல. உள்ளே உன் அம்மா நெருப்பில காய்ச்சறாங்களே, அந்த வெண்ணெய் மாதிரிதான் உன் மனசு. அதனாலதான், ஊடல்ல உன்னால ஒரு நாள் கூடத் தாக்குப் பிடிக்க முடியல!" என்றபடியே, தோழியின் கைகளை ஆதரவுடன் பற்றினாள் அம்பிகா.
கற்பியல்
நிறையழிதல் (தயக்கம் உடைபடுதல்)
பொருள்:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்த பின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?
No comments:
Post a Comment