"அதுக்கென்ன? நூறாவது நாள் கொண்டாடப் போறியா?" என்றாள் மாலினி.
"கொண்டாடற விஷயமா இது? அவரைப் பிரிஞ்சு நான் எவ்வளவு துடிச்சுக்கிட்டிருக்கேன்னு உனக்குத் தெரியாதா?" என்றாள் காஞ்சனை, சற்றே கோபத்துடன்.
"மன்னிச்சுக்கடி. விளையாட்டுக்குச் சொன்னேன். மூணு மாசத்தில வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாரு. மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. அதனால, அவர் திரும்பி வர நேரம் வந்துடுச்சுன்னுதானே சொல்ல வரே?"
"ஆமாம்."
"அது சரி. எப்படி 98 நாள்னு சரியாச் சொல்ற?"
"இங்கே வா" என்று தோழியை உள்ளே அழைத்துச் சென்ற காஞ்சனை, அங்கிருந்த சுவற்றைக் காட்டி, "பார்!" என்றாள்.
சுவற்றில் கரிக்கட்டியால் வரிசையாகச் சிறிய கோடுகள் வரையப்பட்டிருந்தன.
"அவர் போன நாளிலேந்து தினம் ஒரு கோடு கிழிச்சுக்கிட்டு வரேன்!"
"நாளை எண்ணிக்கிட்டிருக்கறதுன்னு ஒரு பேச்சுக்குச் சொல்லுவாங்க. நீ நிசமாவே நாளை எண்ணிக்கிட்டிருக்கியே!" என்ற மாலினி, கோடுகளை உற்றுப் பார்த்து விட்டு, "ஆமாம். இது என்ன? ஒவ்வொரு கோட்டுக்கு மேலேயும் பொட்டு வச்ச மாதிரி ஏதோ வட்டக் குறி தெரியுதே, அது என்ன?"
"எனக்குத்தான் கணக்கு சரியா வராதே! அதனால, அடிக்கொரு தடவை ஒவ்வொரு கோட்டையும் என் விரல் நுனியால தொட்டு எண்ணிப் பாப்பேன். என் விரல் நுனி படிஞ்ச இடம்தான் அந்தக் குறி!" என்றாள் காஞ்சனை.
"உன் கையைக் காட்டு!" என்றபடியே காஞ்சனையின் ஆள்காட்டி விரலை நிமிர்த்திப் பார்த்த மாலினி, "இப்படி இந்தக் கோட்டையெல்லாம் அடிக்கடி தொட்டுத் தொட்டு எண்ணிக்கிட்டிருக்கறதாலதான் உன் விரல் நுனியே தேஞ்சு போன மாதிரி இருக்கு. கவனமா இருடி! தேஞ்சுத் தேஞ்சு, உன் விரலே சின்னதா ஆயிடப் போகுது!" என்றாள், விளையாட்டாக.
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த காஞ்சனையின் தாய், "அதோடயா? பத்து நாளா தினம் நூறு தடவை வாசலுக்குப் போய், அவ புருஷன் வராரான்னு தெருமுனையைப் பார்த்துட்டு வரா! புருஷன் வந்தா, வீட்டுக்கு வராம தெருவோடயே நடந்து போயிடுவாரா என்ன?" என்றாள்.
காஞ்சனையின் கண்களைத் தன் கையினால் விரித்துப் பார்த்த மாலினி, "அதான் கண்ணு ரெண்டும் வெளிறிப் போயிருக்கு!" என்றாள்.
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment